குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் அசத்திய நாட்டுப்புற கலைஞர்கள்: பார்வையாளர்கள் பாராட்டு

By எல்.மோகன்

நாகர்கோவில்: குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளில் அசத்தினர். அவர்களை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மண்டல கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் குமரி சங்கமம் –நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி 11, 12 ஆம் தேதி(இன்று) ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நம்ம ஊரு திருவிழாவை முரசு கொட்டி துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், “நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், நாட்டுப்புறக் கலை வடிவங்களை பாதுகாத்திடும் பொருட்டும் உலகமெங்கும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலை வடிவங்களை அறியச் செய்திடும் வகையில், சென்னையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலைவிழாவான ``நம்ம ஊரு திருவிழா" கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் கடந்த 2007ம் ஆண்டு சென்னை சங்கமம் என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பார் போற்றும் நம் கலைப் பண்பாட்டினை இளைய தலைமுறையினர் அறிந்து, மகிழும் வகையில் சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா. மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தி, நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களின் பகிர்வினைக் கொண்டாடுவதற்கும் கலை பண்பாட்டுத் துறையின் 7 மண்டலங்களுக்கு உட்பட்ட காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோவை, வேலூர் ஆகிய 8 முக்கிய நகரங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படுகிறது.

சென்னையில் தொடங்கப்பட்ட சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவினை தமிழ்நாட்டின் தென் எல்லையான கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடத்தி நிறைவு செய்யும் தருணத்தில் கன்னியாகுமரியை காண வந்துள்ள பல்வேறு விதமான கலை மற்றும் கலாச்சார தொடர்புகளுடைய அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளையும், பாரம்பரிய கலாச்சாரத்தினையும் இவ்விழாவின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இத்திருவிழாவில் திருநெல்வேலி மண்டலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கொம்பு தப்பு, நையாண்டிமேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, தேவராட்டம், மாடாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், தெம்மாங்கு பாடல், வில்லிசை, களியலாட்டம் மற்றும் தோல்பாவைக்கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் இரு நாட்களில் சுமார் 375 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட கலை போட்டிகளில் குரலிசை, பரதநாட்டியம், கிராமியநடனம் மற்றும் கருவியிசை ஆகிய கலை பிரிவுகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசினையும், பாராட்டு சான்றுகளையும் வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இளைஞர்கள் மாநில அளவில் நடைபெறும் கலை போட்டிகளில் கலந்து கொண்டு மேன்மேலும் பரிசுகள் பெற்று தங்கள் கலை திறமையினை வளர்த்துக் கொள்ள வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் தங்களது கலைத் திறமையினை காட்டியுள்ள கலைஞர்கள் மேன்மேலும் வளர்ந்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் விருதுகளை பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இவ்விழாவில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களை பாராட்டி சான்றிதழ், மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பாராட்டினார். கலைநிகழ்ச்சிகளில் அசத்திய நாட்டுப்புற கலைஞர்களை பார்வையாளர்களும் வெகுவாக பாராட்டினர். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE