உதகை கோயிலில் வித்யாரம்பம் - பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: விஜயதசமி பண்டிகையையொட்டி பெருமாள் கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி எனப்படும் 9 திருநாட்களின் இறுதியில், 9வது நாள் ஆயுத பூஜையாகவும், 10-வது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாட்களை தமிழக மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர், தங்களது மழலை குழந்தைகளின் கல்வி பயணத்தை தொடங்கி வைத்தனர்.

இதன்படி தங்க மோதிரத்தால் குழந்தைகளின் நாவில் ஓம் என்று அர்ச்சகர் சசிகாந்த் எழுதினார். இதையடுத்து தட்டில் நிரப்பப்பட்ட அரிசி மற்றும் நெல் மணியில் குழந்தைகளின் விரலை பிடித்து பெற்றோர் ஓம் என எழுதினர். பெருமாள் கோயிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதேபோல் நேற்று புதிதாக தொழில் தொடங்குபவர்கள், வாகனம் வாங்கியவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள் அனுப்பி மகிழ்ந்தனர்.

மேலும் கடந்த இரண்டு வாரமாக விரதம் இருந்த பக்தர்கள் உங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.வழக்கமாக உதகை அய்யப்பன் கோயிலில் விசேஷமாக கொண்டாடப்படும் விஜயதசமி, திதிமாற்றம் காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE