காரைக்குடி: காரைக்குடி ரயில்வே சுரங்கப்பாதைக்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
காரைக்குடி ரயில் நிலையம் அருகே லட்சுமி நகர், பொன் நகர் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. நேற்று மாலை பெய்த கனமழையால் சுரங்கப்பாதைக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக லட்சுமி நகர், பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் 10 கி.மீ சுற்றிச் சென்று வருகின்றனர். இன்று காலை சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் தேடி இறந்தவரின் உடலை மீட்டனர். தொடர்ந்து அழகப்பாபுரம் போலீஸார் விசாரித்ததில் இறந்தவர் ரயில்வே பகுதியைச் சேர்ந்த பீட்டர் (55) என்பது தெரியவந்தது. மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
» மகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த தந்தை - அதிர்ச்சி வீடியோ
» கவரைப்பேட்டை ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு