தேனியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர கடைக்குள் புகுந்தது: ஒருவர் உயிரிழப்பு

By என்.கணேஷ்ராஜ்

தேனி: உத்தமபாளையத்தில் இன்று காலை கேரளா சரக்கு லாரி சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் படுகாயம் அடைந்தனர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் சேதமாகின.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே நாட்டு மருத்துவ வைத்தியசாலை உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவது வழக்கம். இதற்காக இப்பகுதியில் சாலையோர கடைகள் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை இங்குள்ள இட்லி கடையில் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அருகிலேயே ஏராளமான டூவீலர்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

அப்போது கேரள பதிவெண் கொண்ட லாரி மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு மேகமலைக்குச் சென்று கொண்டிருந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் அருகே உள்ள திருப்பத்தில் திரும்பிய போது லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையோர தள்ளுவண்டி இட்லி கடை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டூவீலர்கள் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. அருகில் இருந்த மின்கம்பமும் சாய்ந்தது.

இதனைப் பார்த்த பலரும் அலறியடித்து ஓடினர். இதில் காரில் இருந்த உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ் (65), உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் தெருவை சேர்ந்த வெள்ளையம்மாள் (70), மணிகண்டன் என்பவரது மகள் பவித்ரா (14) கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தாமஸ்மேத்யூ (57) ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் தாமஸ்மேத்யூ வழியிலேயே உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்தினால் 10-க்கும் மேற்பட்ட டூவீலர்கள், தள்ளுவண்டி கடை, இரண்டு மின்கம்பங்கள், 5 சைக்கிள்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் டி.எஸ்.பி.செங்கோட்டு வேலவன் ஆய்வு செய்தார். உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE