கவரைப்பேட்டை ரயில் விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு

By KU BUREAU

சென்னை: சென்னை அருகே நேற்றிரவு மைசூரு - தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நிகழ்ந்த இடத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி இன்று (அக்.12) நேரில் ஆய்வு செய்தார்.

மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் கும்மிடிபூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துப் பகுதியிலிருந்து அனைத்துப் பயணிகளும் மீட்கப்பட்டனர். சிலர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மூவர் கடுமையான காயங்களுடன் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். காயமடைந்தவர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி இன்று (அக்.12) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ரயில்வே தண்டவாளங்கள், இணைப்பு பாதைகள், தடுப்புகள், சிக்னல்கள், ரயில் நிலைய எலெக்ட்ரானிக் உள்இணைப்பு அமைப்புகள், கன்ட்ரோல் பேனல்கள் உள்ளிட்ட ரயில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக, விபத்துக்குள்ளான மைசூரு - தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் இன்று (அக்.12) காலை 4.45 மணியளவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE