கவனக்குறைவே ரயில் விபத்திற்கு காரணம்: முதற்கட்ட விசாரணையில் தகவல்!

By KU BUREAU

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு கவனக்குறைவே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு ரயில் நேற்றிரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டன.

விபத்து நிகழ்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாகியும் மீட்பு பணிகள் மழை காரணமாக தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கவனக்குறைவே ரெயில் விபத்திற்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே இருப்புப்பாதை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ரயில்வே போலீஸாரின் விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாக பாக்மதி விரைவு ரெயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

ரெயில் விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE