சர்வதேச பெண் குழந்தைகள் தினம் | பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் உறுதியேற்போம்

By KU BUREAU

சென்னை: "பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்க உறுதியேற்போம்" என சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விவசாயம் முதல் விண்வெளி வரையிலும், இலகு பணிகள் தொடங்கி மிக கடினமான ராணுவப் பணிகள் வரையிலும் மட்டுமின்றி விளையாட்டு, கலை, இலக்கியம் என உலகில் எத்தனை துறைகள் உண்டோ அத்துணை துறைகளிலும் ஆணுக்கு சரி நிகர் சமமாக பூமியில் தொடங்கி, விண்வெளி வரையிலும் சரித்திர சாதனைகள் படைத்து கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் சிங்கப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் "சர்வதேச பெண் குழந்தைகள் தினம்" நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, "பெண்கள் நாட்டின் கண்கள்" என்பதை மனதில் கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழாவண்ணம் அவர்களுக்கு பாதுகாப்போடு கூடிய தரமான கல்வி கிடைப்பதையும், பாதுகாப்பான வாழ்விட சூழல் அமைவதையும் உறுதி செய்ய ஆட்சியாளர்களும், இச்சமூகமும் உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும், பாலின சமத்துவம், கல்வி, பாதுகாப்பு, அதிகார மாற்றங்கள், உரிமைகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பெண் குழந்தைகளின் மேம்பாட்டை மனதில் கொண்டு கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கடை பிடிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஆனால் அந்த எண்ணம் நிறைவேறியதா..? என்றால் மில்லியன் டாலர் விடை தெரியாத கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. ஏனெனில் இதற்கு ஒருவகையில் நம்மை மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற ஆட்சியாளர்களும் (எந்த ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல), பொதுமக்களாகிய நாமும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் "நாய் விற்ற காசு குரைக்காது" என்கிற அடிப்படையில் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளின் தயாரிப்பிற்கும், அவற்றின் விற்பனைக்கும் அனுமதி கொடுத்து விட்டு, அவற்றை அனுமதிக்கவில்லை என்றால் புறவாசல் வழியே புகுந்து விடும் என்கிற போலியான காரணங்களை கூறி ஆண்களோடு பெண்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவச் செல்வங்களும், இளம் தலைமுறையும் இன்று போதைக்கு அடிமையாக வலுவான அடித்தளத்தை உருவாக்கி விட்டனர்.

சக அரசியல் கட்சிகளோ தேர்தல் நேர கூட்டணி கணக்கு பார்த்து பெயர் அளவிற்கு மட்டும் மது விலக்கு, புகையிலை, போதை எதிர்ப்பு என தினம் ஒரு போலி நாடகமாட, சட்டம் ஒழுங்கை பேணி காத்து, குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளோ கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் மூலம் இளம் தலைமுறையை சீரழித்து கொண்டிருக்கும் கயவர்களை கண்டும், காணாதது போல் இருந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

அதே சமயம் அந்த போதை வஸ்துகளில் இருந்து விலகி நிற்க வேண்டிய பொதுமக்களாகிய (பெற்றோர்) நாமோ அவற்றை அரவணைத்துக் கொண்டு, பிள்ளைகள் தவறான வழியில் செல்ல அவற்றை வாங்க நமது பச்சிளம் குழந்தைகளையே கடைகளுக்கு அனுப்பி வைக்க, பெற்றோரு(தந்தை)க்காக சிகரெட், புகையிலை வாங்க கடைகளுக்கு செல்லும் இளம் சிறார்கள் வழி தவறி, தடம் மாறி போதை எனும் அரக்கன் மீது மோகம் கொண்டு அவற்றை மெது, மெதுவாக நுகர்வதும், அப்படியே படிப்படியாக மதுக் கடையை நோக்கி நகர்வதும் என்றாகி புகையிலையில் தொடங்கிய பயணம், மதுவிற்கு சென்று பின்னர் சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்து கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்தும் வரை கொண்டு செல்ல அடுத்த தலைமுறையை அழித்த பாவிகளாக பல பெற்றோர் பாவத்தை சுமப்பவர்களாக நின்று கொண்டிருக்கிறோம்.

விளைவு ஆண்களின் குறிப்பாக இளம் தலைமுறையினரின் போதை வஸ்து பயன்பாடு, நவீன அலைபேசிகளின் செயல்பாடு காரணமாக காமுகர்களாக மாறும் அவர்களின் அகோர காம பசிக்கு பச்சிளம் பெண் குழந்தைகள் முதல் மிக வயதான பெண்கள் வரை விதிவிலக்கின்றி பாலியல் வன்கொடுமைகளுக்கு இரையாக பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு, நாள் அதிகரித்து நாம் எங்கே போகிறோம்..? என தெரியாமலேயே அடுத்த தலைமுறை ஏழேழு தலைமுறைக்குமான பாவத்தை சுமந்தபடி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆக இதற்கு மூலக்காரணம் மது, சிகரெட், குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான புகையிலை மற்றும் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை வஸ்துகளும், பொறுப்பற்ற பெற்றோர்களும், பேராசை பிடித்த ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நமது இந்தியாவில் ஆண்டுக்காண்டு பல மடங்கு உயர்ந்து, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அவை சுமார் 300-க்கும் மேல் அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக 2022ம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளி விவரப்படி மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகள் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 1,62,449 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை (போக்சோ) வழக்கு தொடர்பானவை என்றும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும், தற்போது வரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறது.

பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான போக்சோ வழக்குகள் நீதிமன்றத்தில் லட்சக் கணக்கில் நிலுவையில் இருக்கும் போது அந்த வழக்குகள் தொடர்பாக காவல்துறை முறையாக விரைந்து விசாரணை நடத்தி உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறுவதே அவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு காரணமாகும் என காவல் துறை மீதான மற்றொரு ஒரு கரும்புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதே நேரம் "ஏழையின் சொல் அம்பலம் ஏறாது" என்பதற்கேற்ப தாழ்த்தப்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் மேலும் தாமதப் படுத்தப்பட்டு நீர்த்துப் போகச் செய்வதாக தெரிவிக்கும் மற்றுமொரு புள்ளி விபரம் வேதனையளிக்க, அது நம்மை மிகுந்த கவலை கொள்ளச் செய்கிறது.

"தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்" என்பதால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மேல்தட்டு, கீழ்தட்டு என்கிற பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டுமானால் போக்சோ வழக்குகளை தாமதமின்றி விசாரித்து நீதிமன்றத்தில் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க காவல்துறையினர் மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயலாற்ற வேண்டும்.

அத்துடன் காவல்துறையினருக்கு ஏற்கனவே கடும் பணிச்சுமை உள்ள நிலையில் சிபிஐ, சிபிசிஐடி போன்று போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு என்று காவல்துறையில் தனி சிறப்பு பிரிவை உருவாக்கி, புதிய பணியிடங்களுக்கு உரிய காவல்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற மது, கஞ்சா, சிகரெட், குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான போதை வஸ்துகள் தான் மூலக் காரணமாக அமைகிறது எனும் போது அவற்றை மக்களிடம் இருந்து முற்றிலுமாக விலக்கி வைக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து முடிவெடுத்து செயல்படுத்த முன்வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்துகிறது" என்று பொன்னுசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE