சென்னை | கள்ள ரூபாய் நோட்டுகளை கையில் கொடுத்து கால் டாக்ஸி ஓட்டுநர்களை குறிவைத்து ‘ஜிபே’ மூலம் பண மோசடி

By KU BUREAU

சென்னை: கால் டாக்ஸி ஓட்டுநர்களை குறிவைத்து மீண்டும் நூதன முறையில் பண மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வருபவர் கோவிந்தராஜ் (34). நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியில் இருந்தபோது, ஆன்லைன் புக்கிங் வந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர் முனையில் பேசிய நபர், தன்னை மருத்துவர் என அறிமுகம் செய்து கொண்டு வடபழனியிலிருந்து மகாபலிபுரம் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த நபரை வடபழனி விஜயா மருத்துவமனையிலிருந்து கோவிந்தராஜ் காரில் ஏற்றியுள்ளார். காரில் ஏறிய நபர்,உணவு சாப்பிட வேண்டும் எனக்கூறி,வடபழனியில் உள்ள பிரபலமானஉயர்ரக ஓட்டலுக்கு செல்லும்படிகூறியுள்ளார். ஓட்டலுக்கு சென்றதும், தன்னுடன் சாப்பிட வருமாறு கோவிந்தராஜை அந்த நபர் அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும், அவசர தேவைக்குஜி-பேயில் ரூ.7 ஆயிரம் வேண்டும். கையில் பணம் உள்ளது எனக்கூறி கோவிந்தராஜிடம் இருந்து ஜி-பேவாயிலாக ரூ.7 ஆயிரம் பெற்றுள்ளார். பின், கையிலிருந்த ரூ.7 ஆயிரத்தை கோவிந்தராஜிடம் கொடுத்தார். அடுத்து, தனது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது, அவசரமாக போன் செய்ய வேண்டும் எனக்கூறி, கோவிந்தராஜின் செல்போனைவாங்கி, பேசிவிட்டு தருவதாகக் கூறி வெளியே சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் திரும்பி வராததால், அந்த நபர் அளித்த பணத்தைஓட்டலில் சாப்பிட்டதற்காக கோவிந்தராஜ் கொடுத்துள்ளார். அப்போதுதான் அந்த பணம் சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் பணம் எனத் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார்அளித்தார். அதன்படி, போலீஸார்வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பண மோசடியில் ஈடுபட்டது விருகம்பாக்கம் சின்மையா நகரைச் சேர்ந்த சஞ்சய் வர்மா (45) என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

மோசடி நபரின் பின்னணி: இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நுனி நாக்கில் ஆங்கிலம், பார்ப்பதற்கு படித்தவர் போலவும்,பணக்காரர் போலவும் தோற்றமளிக்க கோட் சூட் என, டிப் டாப் ஆகஉடை அணிந்து தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சஞ்சய் வர்மா கைவரிசை காட்டியுள்ளார். இவர், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியவர்.

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வரும் ஆந்திராவைச் சேர்ந்ததினேஷ் என்பவரின் காரில் பயணம் செய்வதுபோல் நடித்து ரூ.8 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், கடந்தஆண்டு கோடம்பாக்கம் போலீஸார் சஞ்சய் வர்மாவை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கார் புக் செய்து, பெரிய மருத்துவமனைக்கு ஓட்டுநர்களை வரவழைப்பது இவரது வழக்கம். கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தன்னை பார்த்தவுடன் மருத்துவர் என நம்புவதற்காகப் பணக்காரத் தோற்றத்தில் டிப் டாப்பாக உடை அணிந்து இருப்பார்.

காரில் பயணிக்கும் போது ஓட்டுநர்கள் காதில் விழும் வகையில் நடிகர்களுடனும், அரசியல் பிரமுகர்களுடனும், தொழில் அதிபர்களுடன் பேசுவது போன்ற செல்போன் உரையாடல்களை நிகழ்த்துவார். சிறிது நேரத்தில் தனது நண்பர்கள்அல்லது தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்போன்றோருக்கு உடனடி பணத்தேவை வந்தது போல் செல்போன் உரையாடலைத் தொடருவார்.

அப்போது கால் டாக்ஸி ஓட்டுநரிடம் தன் கையில் காசு இருப்பதாகவும் ஜிபே, போன் பே ஆகியவை இல்லாத காரணத்தால் கால் டாக்ஸிடிரைவர்கள் பணத்தை செயலியின் மூலம் உடனடியாக அனுப்ப முடியுமா எனக்கேட்டு, குறிப்பிட்ட நம்பரை கொடுத்து பணத்தை அனுப்புமாறு சஞ்சய் வர்மா நூதன முறையில் மோசடி செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE