ஆயுதபூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் வெவ்வேறு இடத்தில் சிறப்பு சந்தை: விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை

By KU BUREAU

சென்னை: கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை ஆகியவிழாக் காலங்களில், பண்டிகைகளுக்குத் தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் ஒரே இடத்தில் வாங்க, மலர் சந்தை வளாகத்தில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம்.

இந்த சந்தைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதேநேரம், அதிக அளவில் மக்கள் கூடுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது கோயம்பேடு சந்தை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் ஆயுதபூஜை சிறப்பு சந்தைதிறக்கப்பட்டுள்ளது. அங்கு பொரிமட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பழச்சந்தை எதிரில் சாலையோரம் தோரணங்கள், பூசணிக்காய் விற்கவும், 14-வது நுழைவுவாயிலில் வாழைக்கன்றுகளை விற்கவும் அனுமதிக்கப்பட் டுள்ளது.

இச்சந்தையில் பொரி ஒரு படி ரூ.20, உடைத்த கடலை, நாட்டு சர்க்கரை பாக்கெட்டுகள் சேர்த்த பொரிரூ.30, வாழைக்கன்று உயரத்துக்கு ஏற்ப 10 கன்றுகள் கொண்ட கட்டுரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. தென்னை தோரணங்கள் 50 கொண்ட கட்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே பெரும்பாலான கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுதொடர்பாக பொரி வியாபாரிகள் கூறியதாவது: நாங்கள் திருவண்ணாமலை, ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளில்இருந்து வந்து கடை வைத்திருக் கிறோம். இதற்கு முன்பு ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் சந்தை இருந்தது. மொத்த விற்பனையும், சில்லறை விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

ஆனால் இப்போது பொரி கடைகளை மட்டும் தனியே வைத்திருப்பதால், இதை மட்டும் வாங்க இங்கு மக்கள் வரவில்லை. தொழிற்சாலைகள், வணிக நிறுவனத்தினர் மட்டும் வழக்கம்போல வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் பொரி விற்பனை மந்தமாகவே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பு சந்தைக்கு வந்த பொதுமக்கள் கூறும்போது, “இந்த முறை ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திசையில் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பூஜை பொருட்களை வாங்க முடியவில்லை. பழம் வாங்க பழ சந்தைக்கும், பூக்களை வாங்க மலர் சந்தைக்கும் செல்ல வேண்டியுள்ளது. இங்கெல்லாம் சுற்றி வருவதற்குள் மயக்கமே வந்துவிடும்போல் இருக்கிறது. இந்த முறை எங்களுக்கு சிறப்பு சந்தை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது” என்றனர்.

இதுகுறித்து கோயம்பேடு சந்தை தலைமை நிர்வாக அதிகாரி எம்.இந்துமதி கூறும்போது, “சந்தை வளாகத்தில் இப்போது அனைத்து கடைகளையும் ஒரே இடத்தில் திறக்க போதுமான திறந்தவெளி பகுதி இல்லை. போதிய இடம் இல்லாததாலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் வெவ் வேறு இடங்களில் சந்தை திறக்கப் பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE