சென்னை: மின்வாரிய தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) இருவாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை சிறுசேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டி.வெண்ணிலா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘‘தமிழக மின்வாரியத்தில் பல்வேறுதொழில்நுட்ப பணிகளுக்கு திறன் சாராத கேங்மேன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 70 கேங்மேன்கள் மின் விபத்து ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மின் விபத்துகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலும் கூட ஒரு கேங்மேன் பரிதாபமாக இறந்துள்ளார்.
கேங்மேன்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை மின்வாரிய அதிகாரிகள் மதித்து நடப்பதில்லை. எனவே முறையான பயிற்சியும், போதிய தொழில்நுட்பதிறனும் இல்லாத பணியாளர்களை தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என டான்ஜெட்கோவுக்கு உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜரானார். அதையடுத்து நீதிபதிகள், டான்ஜெட்கோ 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
» குரூப்-4 உள்ளிட்ட 7 தேர்வுகளுடன் வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
» விண்வெளி பெரும் வெடிப்புகளை கண்டறிந்தது இஸ்ரோவின் ‘அஸ்ட்ரோசாட்’