தீபாவளி பண்டிகை வியாபாரத்துக்கு பாதுகாப்பு அளிக்க ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் வேண்டுகோள்!

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தேவர் குருபூஜை விழா அன்று கடைகள் திறந்திருக்க அனுமதியும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பொதுச்செயலாளர்கள் குப்தா கோவிந்தராஜன், ஜீவானந்தம், பொருளாளர் சாதிக் அலி உள்ளிட்டோர் இன்று (அக்.10) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷை சந்தித்து மனு அளித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து சங்க பொதுச்செயலாளர் குப்தா கோவிந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கைகளால் மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகளின் அடாவடி நடவடிக்கைகள் குறைந்து வணிகர்கள் அச்சமின்றி வணிகம் செய்து வருகிறோம். கடந்த மாதம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருந்ததற்கு எஸ்பிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இணையதள மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக போட்டியை சமாளிக்க முடியாமல் சிரமப்படும் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள், பண்டிகை கால வணிகத்தை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளனர்.

இந்நிலையில் வரும் 31-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் பசும்பொன் தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. எனவே வரும் அக்.29,30 தேதிகளில் மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் உள்ள கடைகளை திறந்து வணிகம் செய்யவும், மக்கள் பொருட்களை பாதுகாப்பாக வாங்கிச் செல்லவும் அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். சத்திரக்குடி, பார்த்திபனூர், அபிராமம், பேரையூர், பெருநாழி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட காவல் நிலைய அதிகாரிகள் அக்.30 அன்று கடைகளை அடைக்க அறிவிப்பு செய்யாதிருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அக்.30 இரவு தொடங்கி அடுத்த நாள் பகல் வரை ஜவுளி, ரெடிமேட், பட்டாசு, இனிப்புகள், பேன்ஸி பொருட்கள், உணவுப்பொருட்கள், இறைச்சி உள்ளிட்ட கடைகள் திறந்திருக்க எஸ்பி அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE