ஐ.ஆர்.சி.டி.சி - கொரியா சுற்றுலா அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

By மு.வேல்சங்கர்

சென்னை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், கொரியா சுற்றுலா அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், கொரிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வர தூண்டுகோலாக இருக்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் தென் மண்டலம் (ஐ.ஆர்.சி.டி.சி), கொரியா சுற்றுலா அமைப்பு ஆகியவை கைகோர்த்துள்ளது. அதன்படி, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை சேத்துப் பட்டில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஒப்பந்தத்தில், ஐ.ஆர்.சி.டி.சி தென் மண்டலத்தின் குழு பொதுமேலாளர் பி.ராஜலிங்கம் பாசு, கொரியா சுற்றுலா அமைப்பு பிராந்திய இயக்குநர் மியோங் கில் யூன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தினர்.

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் கூறியதாவது: "இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், கொரியாவை ஒரு விரும்பத் தகுந்த சுற்றுலா இடமாக மேம்படுத்துவது மற்றும் வளர்ப்பது ஆகும். பாரம்பரியம், கலாசாரத்தில் தமிழகத்துக்கு கொரியாவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த ஒப்பந்தம், தமிழகம் மற்றும் தென் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கொரியாவின் கலாசார மற்றும் இயற்கை அதிசயங்களை ஆராய ஊக்குவிக்கும்.

மேலும், கொரிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக, கோவில்கள், பாரம்பரிய வரலாறு மற்றும் கலாசார புகழ்பெற்ற ஒரு இடமாக தமிழகம் அமைந்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம், கொரிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வர தூண்டுகோலாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தை முன்னேடுக்கும் விதமாக, தென் கொரியாவின் தலைநகரமான சியோல் நகரத்துக்கு பிரத்யேகமான சுற்றுலாக்களை சென்னையில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE