மதுரை: தொடக்க நிலை வழக்குகளை விசாரணைக்கு எடுக்காத நீதித்துறை நடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரண்ராஜ் என்ற நாகராஜ். இவர் 2016ம் ஆண்டில் நடந்த ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த காதர் அலி, 2017ல் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் சரண்ராஜ் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சரண்ராஜ் தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததால் அவர் மீதான கொலை வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு சரண்ராஜ் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில்: "திண்டுக்கல்லில் 2016ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு இதுவரை விசாரணைக்கு எடுக்கப்படாமல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அடுத்ததாக அந்த கொலைக்கான சாட்சியையும் கொலை செய்துவிட்டனர். ஒரு கொலை வழக்கை விசாரித்து முடிக்காமல் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நிவாரணம் கிடைக்கும்.
உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால் 6 ஆண்டுக்கு பிறகு கொலை வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கை பதிவு செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டும் போதாது. சாட்சிகள் பாதுகாப்பாக இருக்கவும், சாட்சிகள் எந்தவித அச்சமும் அல்லது அச்சுறுத்தல் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதையும் போலீஸார் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நீதித்துறையும் கடமை தவறியுள்ளது.
» நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இதுபோன்ற நீண்ட நாளாக தொடக்க நிலையிலேயே நிலுவையில் உள்ள வழக்குகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என தென்மண்டல ஐஜி உறுதியளித்துள்ளார். இதற்காக ஐஜியை நீதிமன்றம் பாராட்டுகிறது. இதே போன்ற நடவடிக்கைகளை நீதித்துறையும் எடுக்க வேண்டும். எனவே இந்த கொலை வழக்கை அக்டோபர் 22ம் தேதி 2018 முதல் மார்ச் 25ம் தேதி 2024 வரை கையாண்டு வந்த நீதித்துறை நடுவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
தொடக்க நிலை வழக்குகளை முறையாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அனைத்து நீதித்துறை நடுவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன் பிறகும் வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் இருக்கும் நீதித்துறை நடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி கூறியுள்ளார்.