மேட்டூர்: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி அருகே போடிநாயக்கன்பட்டி குப்பதாசன் வளவு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், ஆனந்தி தம்பதியரின் இளைய மகள் புனிதா (19). இவர் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தததால், அவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. பின்னர், பாராமெடிக்கல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த நிலையில், அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த புனிதா நேற்று முன்தினம் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று நேரில் சென்று, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சேலம் அதிமுக புறநகர் மாவட்டம் சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: "கடந்த 2021ல் சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ஒழிப்பு என்றார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை தற்போது வரை உதயநிதி வெளியிடவில்லை. நீட் தேர்வு ரத்துக்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கியதாக தெரிவித்தனர். இந்த கையெழுத்து வாங்கிய படிவங்கள் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் அனைவரின் காலடிக்குதான் சென்றது.
» குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி - வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை!
» தொடரும் மழை: புழல் ஏரிக்கு விநாடிக்கு 323 கன அடி நீர் வரத்து
நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியவில்லை. நாட்டு மக்களை ஏமாற்றுதில் திமுகவினர் வல்லவர்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நம்பி ஏமாந்த மாணவர்கள் உயிரை விடுகின்றனர். இந்த அரசின் போலி அறிவிப்பின் மூலமாக மாணவர்களின் இழப்பை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே, நீட் தேர்வை எதிர்த்து தீர்மானத்தை கொண்டு வந்தோம். நாடாளுமன்றத்தில் பேசினால் மட்டும் போதாது, அழுத்தம் கொடுக்க வேண்டும். மருத்துவ கனவு உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக இப்படிபட்ட முடிவை எடுக்காமல் இதர கோர்ஸ்களில் சேர்ந்து வாழ்வில் முன்னேறலாம். பிரதமரை பலமுறை சந்தித்தும் கூட, நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதல்வர் பேசவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய, திமுக எம்.பி-க்கள் அழுத்தம் கொடுத்தால் வாய்ப்புள்ளது" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.