மதுரை: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு பொதுக் கோயில். ஆனால் தீட்சிதர்கள் சொந்தக் கோயிலாக கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். தீட்சிதர் கிரிக்கெட் விளையாடியதை பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா நேரடியாகவும் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தீட்சிதர்கள் கோயிலில் 30 விதிமீறல்கள் செய்திருப்பதாக வல்லுனர் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்து 9 மாதங்களாகியும் திமுக அரசும், அமைச்சர் சேகர் பாபுவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறார்கள் எனத் தெரியவில்லை. தீட்சிதர்கள் 10 லட்சம் மக்கள் வரும் கோயிலை ஆட்டிப்படைக்கிறார்கள். இதை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று சொன்ன அமைச்சர் சேகர்பாபு, தற்போது தீட்சிதர்களோடு மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். கருணாநிதி ஆட்சியில் சிவனடியார் ஆறுமுக சுவாமியை தேவாரம், திருவாசகம் பாட தீட்சிதர்கள் உள்ளே விட மறுத்த நிலையில், அவரை நேரடியாக கோயிலுக்கு அழைத்துச் சென்று பாட வைத்தவர் கருணாநிதி.
» குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி - வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை!
» டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து மது விற்பதா? - மக்களுக்கு செய்யும் துரோகம் என பாஜக விமர்சனம்
தற்போது கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. உச்சநீதிமன்றம் 2014ல் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கானது அல்ல, கோயிலில் முறைகேடுகள் நடைபெற்றால் அரசு அறங்காவலர்களை நியமிக்கலாம், கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என உத்தரவிட்டுள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் அமைச்சர் சேகர்பாபு உள்ளார்.
இதனால் சிதம்பரம் கோயில் தொடர்பான உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தொகுத்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுத்துள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோயில் மக்களின் சொத்து. தமிழர்களின் சொத்து. கோயிலை தமிழக அரசு விரைவில் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அமைதி காக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறினார்.