டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து மது விற்பதா? - மக்களுக்கு செய்யும் துரோகம் என பாஜக விமர்சனம்

By KU BUREAU

சென்னை: படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறிக்கொண்டே, தீபாவளி பண்டிகைக்கு இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் மது விற்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது வெட்கக்கேடானது. இது பல குடும்பங்களை படுகுழியில் தள்ளும் வேதனையான முடிவு.

‘‘தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம்’’ என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு திட்டம் தீட்டுவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம். மதுவிலக்கு மாநாடு நடத்திய திருமாவளவன் இந்த விஷயத்தில் தமிழக அரசை கண்டிப்பாரா.

ஏழை குடும்பங்களின் நலன் மீது அக்கறை இருந்தால், அவர்களது துயர் நீக்கும் விதமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30, 31 நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE