வலுக்கும் சாம்சங் தொழிலாளர் பிரச்சினை முதல் குரூப்-4 முக்கிய அப்டேட் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

காஞ்சியில் தடையை மீறி சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில், அவர்கள் அமைத்திருந்த பந்தல்களை போலீஸார் பிரித்தனர். மேலும் போராடும் இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திறந்த வெளியில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி போலீஸார் எச்சரித்தனர். போலீஸார் எச்சரிக்கையை மீறி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நேரத்தில் மழை வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், செயலர் முத்துக்குமார் உள்பட 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.

“சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” - “சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்சினையில், தமிழக முதல்வர் தனிப்பட்ட கவனம் செலுத்தி, ஒரு அமைச்சர் குழுவை அமைத்தார். குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் அந்த குழுவில் நியமித்திருந்தார். அமைச்சர் குழுவும் இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மேலும், “இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தொழிலாளர்களின் நலனை முக்கியமாக காக்க வேண்டும். அதேநேரத்தில் நமது மாநிலத்தில் இருக்கக்கூடிய படித்த இளைஞர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற அக்கறையோடு அரசு இந்தப் பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்து அணுகி வருகிறது.
தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிஐடியூ அமைப்பு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தொழிலாளர்களை சந்தித்த திமுக கூட்டணித் தலைவர்கள்: காஞ்சிபுரம் மாவட்ட சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர். இந்நிலையில், காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர், அவர்கள் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “அமைதியான முறையில் போராடக்கூடிய தொழிலாளர்கள் மீது இதுபோல அடக்குமுறையை ஏவுவது, இரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து கைது செய்வது, இதுபோன்ற காவல் துறையின் போக்கு நல்லதல்ல. இவை வன்மையான கண்டனத்துக்குரியது. இதுபோன்ற அடக்குமுறைகளால், தொழிற்சங்கங்களின் எந்தவொரு போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது,” என்று அவர் கூறினார்.

மனித உரிமை ஆணையத்தில் அதிமுக புகார்: வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விசாரணை நடத்தக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

“ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை” - மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ள சுமார் 32,500 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இந்துக்களை பிரிக்க விரும்புகிறது காங்கிரஸ்” - மோடி: அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் கட்சி இந்துக்களை பிரிக்க முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

“ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து அலசி வருகிறோம்” - “ஹரியானா மாநிலத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் அலசி வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளோம்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மைசூரு தசரா விழாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி! - உலகப் புகழ்ப்பெற்ற மைசூரு தசரா திருவிழாவில் முதல் முறையாக இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.

குரூப்-4 தேர்வு: கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பு: குரூப்-4 தேர்வில் புதிதாக மேலும் 2,208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு: வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு ‘புரத ஆராய்ச்சி’க்கான பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

10-வது முறையாக மாறாத ரெப்போ விகிதம்: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE