“ஹரியானாவில் நிகழ்ந்த சிறு தவறு, புதுச்சேரியில் நடக்கக் கூடாது” - வைத்திலிங்கம் எம்.பி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மத்திய பாஜக அரசு தேர்தலில் வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஹரியானாவில் நிகழ்ந்த சிறு தவறு புதுச்சேரியில் நடக்கக்கூடாது. ஆட்சியை தக்க வைக்க மக்களை திசை திருப்ப ரங்கசாமி முயற்சிப்பார் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பி வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமை வகித்து பேசியதாவது: "புதுச்சேரியில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, சம்பளம் இல்லை என பல பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், செய்யாததை எல்லாம் செய்தது போல அரசு நாடகமாடுகிறது. மக்களவைத் தேர்தலில் வென்றதை நம்பி சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க முடியாது.

அடுத்து நம் ஆட்சி தான் என அலட்சியமாக இருக்கக் கூடாது. கடும் உழைப்புடன் கூடிய முயற்சி எடுக்க வேண்டும். ஹரியானாவில் நடந்த சிறு தவறால் ஆட்சியை இழந்துள்ளோம். அந்த தவறு புதுச்சேரியில் நடக்கக் கூடாது; நடக்க விடவும் கூடாது. மத்திய பாஜக அரசு தேர்தலில் வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் முடிவு வரும் முன்பே 5 எம்எல்ஏ-க்களை சட்டப்பேரவைக்கு நியமித்துள்ளனர்.

அதுபோல் புதுச்சேரியிலும் சித்து விளையாட்டு நிகழ்த்துவர். மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். ரங்கசாமியும் விநாடிக்கு வினாடி ஒரு நிலைப்பாட்டை எடுப்பார். ஆட்சியைத் தக்க வைக்க மக்களை திசை திருப்ப முயற்சிப்பார். இதை கவனத்தில் கொண்டு தேர்தலுக்கு காங்கிரஸார் தயாராக வேண்டும்" என்று வைத்திலிங்கம் எம்.பி கூறினார்.

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் முக்கிய வாக்குறுதியான மாநில அந்தஸ்தை மூன்றரை ஆண்டுகளாகியும் பெற முடியவில்லை. அனைத்து முயற்சியும் எடுத்து 3 மாதங்களில் மாநில அந்தஸ்தை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற வேண்டும். தீபாவளிக்குள் ரேஷன் கடைகளைத் திறந்து பொருட்கள் விநியோகம் செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

புதுச்சேரியில் நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு, கோயில் நிலங்கள் அபகரிப்பு செய்யப்படுகிறது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலம் பாஜக எம்எல்ஏ-வால் அபகரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் தலையீட்டால் நிலம் கோயிலுக்கு மீட்டு தரப்பட்டது. காரைக்காலில் பார்வதி ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான நில என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், அரசு அதிகாரிகள் துணையோடு அபகரிக்கப்படுகிறது.

இவர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. உடனடியாக கோயில் நிலம், தனியார் இடம் அபகரிப்புகளை தடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் துறைகளில் லஞ்சம் இல்லாமல் ஏதும் நடப்பதில்லை. அரசு ஊழல்களை மக்கள் முன்பு கொண்டு சென்று பல கட்ட போராட்டங்கள் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE