திருப்பூரில் முறைகேடாக வீட்டில் நாட்டுவெடி தயாரித்தபோது வெடி விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

திருப்பூர்: வீட்டில் நாட்டு வெடிகள் தயாரிக்கும்போது நேரிட்ட வெடி விபத்தில் 9 மாத குழந்தை, பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சத்யப்பிரியா. இந்நிலையில், நேற்று கார்த்தியின் வீட்டிலிருந்து பயங்கர சப்தத்துடன், கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த திருமுருகன்பூண்டி போலீஸார் சோதனையிட்டதில், நாட்டு வெடிகள் கிடந்தன. உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

விபத்து நடந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சுள்ளான் என்ற குமார் (23) என்பவரது உடல் மீட்கப்பட்டது. மேலும், பெண் ஒருவர் உடல் சிதறி இறந்துகிடந்தார். விசாரணையில், கார்த்தியின் மைத்துனர் சரவணகுமார் நம்பியூரில் பட்டாசுக் கடைநடத்தி வருவதும், கோயில் திருவிழாக்களுக்கு நாட்டு வெடி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

அவர் கார்த்தியின் வீட்டில் முறைகேடாக நாட்டு வெடிகளைத் தயாரித்து வந்துள்ளார். நேற்று நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறிவிபத்து நேரிட்டுள்ளது. வெடித்துச் சிதறிய பாகங்கள் தலையில்பட்டதில், கார்த்தியின் வீட்டருகே வசிக்கும் முகமது உசேன் என்பவரது 9 மாத பெண் குழந்தை ஆலியாசிரின் உயிரிழந்ததும் தெரிந்தது.

விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 குழந்தைகள், கார்த்தி, சத்யப்பிரியா உள்ளிட்ட 14 பேர் காயமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக காவல் ஆணையர் லட்சுமி கூறும்போது, ‘‘கார்த்தியின் மைத்துனர் சரவணகுமார், ஆர்டர்கள் அதிகம் வந்ததால் பாண்டியன் நகருக்கு தொழிலாளர்களை அனுப்பி, பட்டாசு தயாரித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த பெண் யார் என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE