பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அமைச்சு பணியாளர்களுக்கான 2 சதவீத ஒதுக்கீடு கடந்த10 ஆண்டுகளாக வழங்கப்படாததால், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு 48 சதவீதம், தகுதிபெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீதம் பதவி உயர்வு வழங்கியும், நேரடியாக 50 சதவீத இடங்களை நிரப்புமாறும் கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இதன்படி தங்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அமைச்சு பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

2 சதவீத இடஒதுக்கீடு: இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது என இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்புஇந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘கடந்த 2014-15 முதல் 2024-25 வரை அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருவதால், அந்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம். தவிர, இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், ‘‘ஆசிரியர் தகுதி தேர்வில்தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் உரிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை. என்வே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளவழக்கு, மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்று கூறி, பட்டதாரிஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE