தண்ணீரை உறிஞ்சும் மணல்வெளிகள் - கனமழை பெய்தும் மூல வைகையில் நீரோட்டம் இல்லை!

By என்.கணேஷ்ராஜ்

கண்டமனூர்: வருசநாடு பகுதிகளில் தொடர் மழை பெய்தும் மூல வைகையில் நீரோட்டம் இல்லை. மணல்வெளிகள் தண்ணீரை அதிகளவில் உறிஞ்சுவதால் வைகை அணைக்கு நீர் சென்றடையாத நிலை உள்ளது.

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் மூல வைகையாக உருவெடுக்கிறது. கடந்த மாதம் மழைப் பொழிவு இல்லாத நிலையில் மூல வைகை வறண்டே கிடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வருசநாட்டின் உள்காடு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தடுப்பணைகள் எதுவும் இல்லாததால் இப்பகுதியில் பெய்யும் மழைநீர் அப்படியே மூல வைகை ஆற்றின் வழியே வைகை அணைக்குச் சென்றடையும்.

ஆனால், தற்போது தொடர் மழை பெய்தும் மூல வைகையின் முகத்துவாரத்தில் மட்டும் லேசான நீரோட்டம் உள்ளது. இந்த நீரும் வருசநாட்டை கடப்பதில்லை. இதனால் மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மூல வைகை மணல்வெளியாகவே காட்சியளிக்கிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டமும் இந்த மூல வைகையால் உயரவில்லை.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "கனமழை பெய்தாலும் ஆற்றுப் படுகையில் உள்ள வெப்பம் காரணமாக நீர் அதிகளவில் உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் தொடர் நீரோட்டம் இல்லை. மழை தொடர்ந்து நீடித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்” என்றனர்.

தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 55.51 அடியாக (மொத்த உயரம் 71) உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1,172 கன அடியாகவும், நீர்வெளியேற்றம் 1,199 கன அடியாகவும் உள்ளது. மூல வைகையின் நீர்வரத்து பூஜ்யமாக இருப்பதால் முல்லை பெரியாறு அணையில் திறக்கப்பட்ட நீரே தற்போது வைகை அணை நீர்மட்டத்தை தக்கவைத்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE