“ரேஷன் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்” - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

By என்.சன்னாசி

மதுரை: “தமிழகத்தில் ரேஷன் பொருட்களை போதிய இருப்பு வைத்து, தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கவேண்டும்” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு வலியுறுத்தினார்.

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இதில் பங்கேற்றார். முன்னாள் எம்பி-யான என்.எஸ்.வி. சித்தன், முன்னாள் எம்எல்ஏ-வான கே.எஸ்.கே.ராஜேந்திரன், மாநகர மாவட்ட தலைவர் ராஜாங்கம், பாரத் நாச்சியப்பன் உள்ளிட்ட மாநில, தென்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக வட்டார, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்கும் மண்டல மாநாடு அடுத்த மாதம் 4 இடங்களில் நடத்தப்படும்.

வான்படை சாகச நிகழ்ச்சியை சென்னையில் நடத்த மத்திய அரசு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி. ஆனால், தமிழ்நாடு அரசு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை. பல லட்சம் பேர் கூடுவர் என, தெரிந்தும், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்யவில்லை. 5 பேர் மயங்கி உயிரிழந்தனர். பலர் மயங்கினர். அரசின் அஜாக்ரதையே இதற்குக் காரணம். உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளில் போதிய இருப்பு வைத்து அனைத்துப் பொருட்களும் வழங்க வேண்டும். ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து வருவதால் தட்டுப்பாடு இன்றி ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்கவேண்டும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்கப்படுகிறது. இதை தனிக்காவல் படையை உருவாக்கி தடுக்கவேண்டும். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்துள்ளன. தமிழ்நாடு அரசு நினைத்தால் காலக்கெடு வைத்து மதுக்கடைகளை மூடலாம். அப்படிச் செய்யாமல் மத்திய அரசு மீது பழி போடுகின்றனர். இது போன்ற பிரச்சினைகளை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். மக்களை அரசு ஏமாற்ற முடியாது. தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, மதுரையில் ரோடுகள் குண்டும் குழியுமாக ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இவற்றை சீரமைக்க வேண்டும். தீபாவளியையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு கெடுபிடியின்றி முறையான அனுமதியை வழங்க வேண்டும். திமுக அரசு மக்களின் சுமையை குறைக்காமல், சொத்துவரி உயர்வு போன்ற பல்வேறு வகையில் விலைவாசியை உயர்த்தி மூன்றரை ஆண்டாக வாக்களித்த மக்களை ஏமாற்றுகிறது. எல்லாத் துறைகளின் செயல்பாடுகளும் சரியின்றி நாளுக்கு நாள் மக்களுக்கு சுமை அதிகரிக்கிறது.

ஜம்மு -காஷ்மீரில் பாஜகவுக்கு பின்னடைவு என்றாலும், தனிக்கட்சியாக அதிக தொகுதிகளை பிடித்து இருப்பது அந்த மாநில மக்கள் பாஜகவை எதிர்க்கவில்லை என, தெரிகிறது. காங்கிரஸ் பிராந்திய கட்சிகளுடன் சேர்ந்து அதிக தொகுதிகளை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரம் தேவை என்பது தலைவர் மூப்பனார் ஆரம்பித்த பொற்சொல். இது வேண்டும் என்பது என் மனதிலும் உள்ளது என்றாலும், இந்த எண்ணம் நிறைவேற இலக்கு வேண்டும். வெற்றியின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிறைவேறலாம்.

நடிகர் விஜய் போன்ற யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அவர் கட்சி தொடங்கியது எல்லா கட்சிக்கும் பாதிக்கும். அரசியலில் இளம் தலைமுறை என, யாராக இருந்தாலும் தேர்தலில் மக்கள் பணி, நம்பிக்கை அடிப்படையில் வாக்களிப்பர். நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் 18 பெட்டிகளுடன் இயக்க, என்ஜின் பலம் இருந்தாலும் தற்போது 8 பெட்டிகளுடன் ஓடுகிறது. மேலும், 10 பெட்டிகளுடன் ஓட்டினால் தென்மாவட்ட மக்கள் பயன்பெறுவர். ரயில்வே நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE