அஞ்சல் துறை சார்பில் ‘அன்புள்ள சென்னைக்கு’ புகைப்பட அஞ்சல் அட்டை வெளியீடு!

By மு.வேல்சங்கர்

சென்னை: தேசிய அஞ்சல் வாரத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் அஞ்சல் துறை சார்பில், ‘அன்புள்ள சென்னைக்கு’ என்ற தலைப்பில் புகைப்பட அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை சார்பில், அக்.7ம் தேதி முதல் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் ஒரு அங்கமாக அக்.8ம் தேதி அஞ்சல் தலை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் வகையில், ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் ‘அன்புள்ள சென்னைக்கு’ என்ற தலைப்பில் தொகுப்புகளாகப் புகைப்பட அஞ்சல் அட்டைகள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக, திரைப்பட நடிகரும் ஓவியருமான சிவகுமார் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், ‘அன்புள்ள சென்னைக்கு’ என்ற தலைப்பில் புகைப்பட அஞ்சல் அட்டைகளை சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நடராஜன் வெளியிட, திரைப்பட நடிகர் சிவகுமார் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது: "இந்தியாவின் ஓவியக்கலை, சிற்பக்கலைகளின் அடையாளமாக அஜந்தா எல்லோரா ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன. கி.மு 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 6ம் நூற்றாண்டு காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, தஞ்சாவூர் கோயில் கி.பி 1004 முதல் கி.பி 1010 காலக் கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது. மறுமலர்ச்சி காலத்தில் பல்வேறு ஓவியங்கள் மிகச் சிறந்த ஓவியர்களால் உருவாகின. தற்போதயை நவீன காலத்தில் ஓவியங்கள் வரைவது எளிதாகி இருக்கிறது.

அந்தக் காலத்து ஓவியங்களும் அழகு, இக்காலத்து ஓவியங்களும் அழகே. 120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் ஓவியர்களை கொண்டாட வேண்டும்" என்று நடிகர் சிவகுமார் கூறினார். இளமைக் காலத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பதி, மும்பை உள்பட பல நகரங்களுக்குச் சென்று, வரைந்த ஓவியங்களை நடிகர் சிவகுமார் இந்த நிகழ்ச்சியில் நினைவுக் கூர்ந்தார். அந்த ஓவியங்களை அவர் மேடையில் வெளிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அஞ்சல் தலை நினைவு சின்னப் பெட்டி வெளியிடப்பட்டது. இந்த நினைவுச் சின்னம் பெட்டியில் சென்னையைக் கருப் பொருளாகக் கொண்டு ஒரு நோட்டுப் புத்தகம், சாவிக்கொத்து மற்றும் லேப்பல் ஊசிகள், மவுஸ் பேட், பேனா மற்றும் எழுதுகோல், முத்திரைகள் மற்றும் அஞ்சல் சேவைகளின் மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட கோஸ்டர்கள் உள்ளன.

இந்த பெட்டியின் விலை ரூ.750 இது, அண்ணாசாலையில் உள்ள ஃபிலாடெலிக் பணியகத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளரும் கருத்தோவியருமான மதன், ட்ராட்ஸ்கி மருது, சென்னை நகர மண்டல உதவி இயக்குநர் (வணிக மேம்பாடு) பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE