பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் சமூக விரோதிகளின் கூடாரமான அம்மா திருமண மண்டபம்!

By KU BUREAU

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபம், பயன்பாடின்றி புதர் மண்டி கிடப்பதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - பொள்ளாச்சி சாலை ஆச்சிப்பட்டியில் அம்மா திருமண மண்டபம் 2019-ம் ஆண்டு ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அப்போதைய எம்.பி., மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டது. பயன்பாட்டுக்கு வராமல் இருந்த மண்டபம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய தற்காலிக அலுவலகமாக செயல்பட்டது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு அம்மா மண்டப கட்டிடம் போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. திருமண மண்டபம் முன் குப்பை குவிக்கப்பட்டு எரிப்பதால், அந்த இடமே சுகாதாரமின்றி காட்சியளிக்கிறது. நகரின் எல்லைப்பகுதியில் உள்ள மண்டபத்தின் முன் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையால், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு அம்மா திருமண மண்டபம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபம் பணிகள் முடிந்தும் இதுவரை ஒரு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை. எந்த நோக்கத்துக்காக மண்டபம் கட்டப்பட்டதோ அதன் நோக்கமே வீணாகி வருகிறது. அம்மா திருமண மண்டபத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE