அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் கால்நடை ஆராய்ச்சி பூங்காவை திறக்கவில்லை: பழனிசாமி குற்றச்சாட்டு

By KU BUREAU

சேலம்: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால்தான், கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவை திமுக அரசு திறக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தை அடுத்த எடப்பாடியில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சியைகாண வாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதனால், லட்சக்கணக்கானோர் கூடினர். போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்காததால், 5 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அரசின் செயலற்ற தன்மையைக் கண்டிக்கிறோம்.

கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, தலைவாசலில் மிகப்பெரிய கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆராய்ச்சிபூங்காவுக்கு தேவையான தனி குடிநீர் திட்டமும் நிறைவேற்றினோம்.

ஆராய்ச்சிப் பூங்காவுக்கான நீரை, சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதை ஏற்க மாட்டோம். நீதிமன்றத்துக்கு செல்வோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை ரத்து செய்வோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால், கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவை திமுக அரசு திறக்கவில்லை.

ஈரோட்டில், கல்லூரி அருகே போதைப்பொருள் விற்றவர்கள் மீது, எனது நண்பரான கல்லூரி தாளாளர் ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், சில நாட்களில் அவர்கள் மீண்டும் போதைப்பொருட்களை விற்கத் தொடங்கியதுடன், கல்லூரி தாளாளரையும் மிரட்டியுள்ளனர். போதைபொருள் விற்பனையை அரசால் தடுக்க முடியாத நிலை உள்ளது.

சென்னையில் 2-வது மெட்ரோ ரயில் திட்டம், அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு மத்திய அரசிடம், திமுக அரசு முறையாக நிதி பெறாமல் விட்டது. இல்லையென்றால், திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். திமுக-வின் 40 மாத ஆட்சியில், தமிழகத்தின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE