ரூ.46 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்

By KU BUREAU

சென்னை: சென்னை, கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு பூங்கா”-வை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின், ‘‘சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்” என அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, சட்டப் போராட்டத்துக்கு பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்ட நிலத்தில், பூங்கா அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.27-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, பரந்து விரிந்தபசுமைச் சூழலில் பொழுதுப்போக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக உலகத் தரத்துடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இதனை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.

இப்பூங்காவில், நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம் பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2,600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை மற்றும் கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்தப்பட்ட 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம் உள்ளது.

மேலும் 23 அலங்கார வளைவுபசுமை குகை, சிற்றுண்டியகம்,சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித் தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்பட கருவிகளுக்கு ரூ.100 மற்றும் வீடியோ கேமராவுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக் கட்டணங்கள் 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லத்தக்கது.

பூங்காவுக்கான நுழைவுச் சீட்டு மற்றும் கட்டணம் குறித்தான தகவல்களையும் ‘https://tnhorticulture.in/kcpetickets’ என்ற இணையதளத்தின் வாயிலாக பெறலாம். மேலும், விரைவுத் தகவல் குறியீடு (க்யூ ஆர் கோடு) மூலமும் நுழைவுச் சீட்டை பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா,தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வேளாண் துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல்பாண்டியன், வேளாண்மைத் துறை இயக்குநர் பி.முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று முதல் பார்க்கலாம்: தோட்டக்கலை அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள 360 டிகிரி அறையில் சுவற்றில் உள்ள பூக்களைத் தொட்டால் அது மலரும். குழந்தைகளை இது வெகுவாகக் கவரும். பட்டாம்பூச்சி பின்னணியில் உள்ள செல்பி பாயிண்டில் முதல்வர், துணை முதல்வர் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். பூங்காவில் உள்ள வெளிநாட்டுப் பறவைகளுக்கு தானியத்தையும், கிளிக்கு பழங்களையும் கொடுத்துமகிழ்ந்தார் முதல்வர். கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு வருவோருக்கு எதிரே உள்ள செம்மொழிப் பூங்காவில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரங்களில் அதன் பெயர் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அருகே க்யூஆர் கோடு உள்ளது. அதனை ஸ்கேன்செய்தால் மரத்தின் முழுவிவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பூங்காவை 1 மணி நேரம் 10 நிமிடம் கண்டு களித்தார். இன்று முதல் பூங்காவைப் பார்வையிடலாம். வெளியில் இருந்து திண்பண்டங்களுக்கு அனுமதி இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE