கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா? - பதில் அளிக்க துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மறுப்பு

By KU BUREAU

திருவண்ணாமலை / விழுப்புரம்: ‘சித்தராமையா மீது நில முறைகேடுவழக்கு உள்ளதால், கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா?’ என்ற கேள்விக்கு அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று குடும்பத்துடன் வருகை தந்தார்.

பே கோபுரம் வழியாக கோயிலுக்குள் வந்து, சம்மந்த விநாயகர் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்குள்ள சிற்பங்களைப் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, சிறப்பு வழியில் சென்று மூலவரை தரிசனம் செய்தார். அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு முன்பு அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன். அதன்பிறகு, இன்று (நேற்று) வந்துதரிசனம் செய்துள்ளேன். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சுற்றுப்புறப் பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது பாராட்டத்தக்கது. அண்ணாமலை யார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டகலை நுட்ப சிற்பங்கள் அற்புதமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்பதில் அளித்துக் கூறும்போது, ‘‘இந்தியாவில் நதிகள் தேசியமயமாக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரைப் பாதுகாக்க மத்தியஅரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நிலமுறைகேடு வழக்கு உள்ளதால், அம்மாநில முதல்வராகும் வாய்ப்பு தங்களுக்கு உள்ளதா? என்ற கேள்விக்கு,‘‘நான் அரசியல் பேச வரவில்லை. அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்’’ என்றார். இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருவக்கரை அம்மன் தரிசனம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்த பின், ஹெலிகாப்டரில் புதுச்சேரி வந்த டி.எம்.சிவக்குமாரை விமான நிலையத்தில் புதுவை காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, விழுப்புரம் வடக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் தனுசு, சிறுவை ராமமூர்த்தி, குமார் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேஉள்ள திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு காரில்சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்குநடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் கார் மூலம் மீண்டும்புதுவை சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பெங்களூரூ புறப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE