மதுரையில் போதைப்பொருள் விற்பனை செய்த கடைகளுக்காரர்களுக்கு ரூ.1.19 கோடி அபராதம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் கடந்த 11 மாதத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 24,175 கடைகளுக்கு ரூ.1.19 கோடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: மதுரை அனுப்பானடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்த போது அனுப்பானடி பகவலன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

உடனே வீட்டிற்கு சென்று சோதனை செய்த‌போது ஹாட் பாக்சில் புகையிலை பொருட்கள் (கூலீப் கணேஷ்) வைத்து விற்பனை செய்த முத்துலெட்சுமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அதே போன்று இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரையும் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உணவு பாதுகாப்பு துறையும் காவல் துறையும் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்( கூலிப், கணேஷ்) உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தடுக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக 24,175 கடைகள் சோதனை செய்யப்பட்டு 3 ஆயிரத்து 111 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 758 கடை சீல் வைக்கப்பட்டுள்ளது‌. அபராத தொகை ஒரு கோடியே 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தடவையாக பிடிக்கப்பட்டால் 25,000 அபராதம் 15 நாள் கடை சீல் வைக்கப்படும் என்றும், இரண்டாவது முறை என்றால் 50,000 ஒரு மாதம் கடைசி சீல் வைக்கப்படும். மூன்றாவது முறை விற்பனை செய்வது தெரிய வந்தால் 3 மாதம் சீல் வைக்கப்பட்டு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE