தூத்துக்குடி: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டுறவு மற்றும் உணவுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள், குடோன்கள், பண்ணை பசுமை காய்கறி கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 70 மகளிருக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான கூட்டுறவு கடன்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெ.முரளிகண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பொ.நடுக்காட்டுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; "தமிழ்நாட்டில் பல்வேறு வகையான 14 பதிவாளர்களின் கீழ் 23,224 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்களை பொருளாதார மையமாக மாற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த ஆண்டு கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.38,005 கோடி கடன் 37 லட்சத்து 73 நபர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
வேளாண் கடன் மட்டும் ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 5.62 லட்சம் பேருக்கு ரூ.5,068 கோடி வழங்கப் பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகளை மிஞ்சும் வகையில் கூட்டுறவு வங்கிகளை மாற்றும் வகையில் குறிப்பாக, கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இணையதள வங்கி சேவை போன்ற வசதிகள் மாவட்ட தலைமை மற்றும் மாநில வங்கிகளில் மட்டுமே இருந்து வருகிறது. தொடக்க கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வங்கி பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
» ஶ்ரீவில்லி.யில் ரூ.1 கோடியில் திருப்பாற்கடல் தெப்பம் சீரமைப்பு - அடிப்படை வசதிகள் இல்லை என புகார்
» நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: எம்.பி. ஆ.ராசாவிடம் கோரிக்கை!
இந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து இதுவரை 2.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 40,009 விவசாயிகளுக்கு ரூ.660.71 கோடி பட்டுவாடா செய்துள்ளோம். இதனை சேமித்து வைக்க 20.55 லட்சம் டன் சேமிக்கும் வசதி கொண்ட 384 குடோன்கள் உள்ளன. இதில் தூத்துக்குடியில் மட்டும் 10 குடோன்கள் உள்ளன. அதுபோல விவசாயிகளுக்கு தேவையான உரங்களையும் கையிருப்பில் வைத்துள்ளோம். யூரியா 40,931 டன், டிஏபி 14,330 டன், எமஓபி 11,316 டன், காம்ப்ளக்ஸ் 32,847 டன் என மொத்தம் 99,424 டன் உரம் கையிருப்பில் உள்ளது. தேர்தல் நேரத்தில் பருப்பு மற்றும் பாமாயில் சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்சினை சீர்செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்துக்கான பருப்பு மற்றும் பாமாயில் இந்த மாதத்துக்குள்ளேயே வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம்.
உணவை பொறுத்தவரைம் அரிசி, சரக்கரை போன்றவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. மாதம் ஒன்றுக்கு 3.7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவை. அவை கையிருப்பில் உள்ளது. அதுபோல சர்க்கரை 34,179 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது. கோதுமையைப் பொறுத்தவரை மத்திய அரசு மாதம் 8,576 மெட்ரிக் டன் வழங்கும் நிலையை மாற்றி, 17,100 மெட்ரிக் டன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நியாய விலைக் கடைகளில் கோதுமை கூடுதலாக வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. விற்பனையாளர் உள்ளிட்ட 6,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்குள் மேலும் 2,600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நியாயவிலைக் கடைகளை தொடர்ந்து செயல்படுத்த மாற்று இடங்களையும் கண்டறிந்து தயாராக வைத்துள்ளோம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் தட்டுப் பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பொருட்களுக்கான டென்டர் இறுதி செய்யப்பட்டு சப்ளை நடந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவாக வழங்க அறிவுறுத்தியுள்ளோம்.
வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 7,428 நியாய விலைக் கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் வங்கிகளில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர். மாநிலத்தின் அனைத்து எல்லை பகுதிகளிலும் காவல் துறை மற்றும் வருவாய் துறை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.