புதுச்சேரி: நடைபாதையில் பள்ளம் விழுந்து கிரேன் சரிந்ததால் வாய்க்காலில் பொக்லைன் இயந்திரம் விழுந்தது.
புதுச்சேரியில் பெரிய வாய்க்காலில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பதியாக, இரண்டு சாலைகளை இணைக்கும் பாலம் கட்டுமானங்களும் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பெரிய வாய்க்காலை கட்டுமானத்துக்கு முன்பாக தூர்வாரியும் வருகின்றனர். அதன்படி புதுச்சேரி நகரப் பகுதியில் லால்பகதூர் சாஸ்திரி வீதி - செஞ்சி சாலை சந்திப்பில் பெரிய வாய்க்காலில் தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
தூர்வாரும் பணியில் சிறிய அளவிலான பொக்லைன் இயந்திரத்தை ஈடுபடுத்துவதற்காக ராட்சத கிரேன் மூலம் வாய்க்காலில் அந்த பொக்லைன் இயந்திரத்தை இறக்க முற்பட்டனர். அப்போது ராட்சத கிரேனின் முன் சக்கரம் இருந்த நடைபாதையில் இருந்த சிலாப் உடைந்து கிரேன் சாலையில் சாய்ந்தது. இதனால் பொக்லைன் இயந்திரமும் வாய்க்காலில் விழுந்தது.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பலரும் அதை வேடிக்கை பார்க்க குவிந்தனர். பின்னர் அங்கிருந்தோரை அப்புறப்படுத்தி, வாய்க்காலில் விழுந்த பொக்லைனையும் மீட்டனர். தவறி விழுந்த பொக்லைன் இயந்திரம் வாய்க்காலுக்குள்ளேயே விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
» மழை எதிரொலி: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக் கிழங்கு விலை உயர்வு!
» தேவிபட்டினம் அருகே 800 ஆண்டுகள் பழமையான மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு