மழை எதிரொலி: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக் கிழங்கு விலை உயர்வு!

By டி.ஜி.ரகுபதி

கோவை: மழையின் காரணமாக வரத்துக் குறைந்ததால், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் நகரப் பகுதியில், நீலகிரி கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் தவிர, சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஏராளமான தனியார் ஏல மண்டிகள் உள்ளன. இங்குள்ள ஏல மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்தின் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், கேத்தி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள், தினமும் விவசாயிகளால் கொண்டுவரப்பட்டு, இங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உதகை உருளைக்கிழங்கு ரூ.1,800-க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சூழலில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு அறுவடைக்கு தயாராகியும், கிழங்குகளை சேகரிக்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் வழக்கமான அளவை விட தற்போது உருளைக் கிழங்கு வரத்து குறைந்துவிட்டது. வரத்து குறைந்ததால் 45 கிலோ எடை கொண்ட, உதகை உருளைக்கிழங்கின் ஒரு மூட்டை விலை குறைந்தபட்சம் ரூ.2,400 முதல் அதிகபட்சம் (தரமான கிழங்குகள்) ரூ.2,850 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தொிவித்தனர்.

இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறும்போது, ''மேட்டுப்பாளையத்தில் இயங்கும் மேற்கண்ட மார்க்கெட்டுகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தினமும் வழக்கமாக 1,000 முதல் 1,400 டன்கள் வரை உருளைக் கிழங்குகள் வரும். ஆனால் மழையின் காரணமாக, அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக நீலகிரியில் இருந்து தினமும் 400 முதல் 600 டன்கள் வரை மட்டுமே கிழங்குகள் வருகின்றன. அடுத்த சில நாட்களுக்கும் இதே நிலை தான் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரைக்கும் உதகை உருளைக் கிழங்கின் விலையும் அதிகமாகத்தான் இருக்கும்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE