புதுச்சேரியில் ‘குரூப் பி’ பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வேண்டும் - துணைநிலை ஆளுநரிடம் திமுக மனு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி அரசுத் துறைகளில் "குரூப் பி" பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க கோரி ஆளுநரிடம் அம்மாநில திமுக மனு அளித்துள்ளது.

புதுவை மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் எம்எல்ஏ-க்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத், திமுக அவைத் தலைவர் எஸ்பி.சிவகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் நித்தீஸ் ஆகியோர் ராஜ்நிவாஸில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் மனு ஒன்றையும் ஆளுநரிடம் அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "புதுவை மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்கு அளித்துவரும் ஊக்கத்தின் காரணமாக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளி வருகின்றனர். அவர்களுக்கான வேலைவாய்ப்பு மிகச் சொற்பமாக உள்ளது. இதனால் பட்டதாரிகள் வயிற்றுப் பிழைப்பிற்காக அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் இருந்தும் முறையாக பணியாளர் தேர்வு வாரியம் இல்லாததால் குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கு காலத்தோடு பணியாளர்களை தேர்வு செய்ய முடியாத அவலம் தொடர்கிறது. குரூப் பி பணியிடங்களான பொதுப்பணித் துறையின் இளநிலைப் பொறியாளர் மற்றும் ஓவர்சியர், கல்வித் துறையின் பட்டதாரி ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர், நிர்வாகத் துறையில் உதவியாளர் பதவிகளுக்கு தற்போது தேர்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் தாமதமாக வந்துள்ளது. காலத்தோடு அறிவிப்பு செய்திருந்தால் பல பட்டதாரிகள் தங்கள் வயது வரம்பை எட்டும் முன்பாக தேர்வுகளில் பங்கேற்றிருக்க முடியும். குறிப்பாக, உதவியாளர் பதவி இவ்வாண்டு தான் முதல் முதலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஓரிரு வயது அதிகமான காரணத்தால் இந்தத் தேர்வில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது வருந்தத்தக்கது.

பல ஆண்டுகள் தாமதித்தும், கரோனா தொற்று காரணமாகவும் அவர்களுக்கான பொதுவான வயது வரம்பை தளர்த்தி சில நூற்றுக்கணக்கான நமது பட்டதாரிகளை போட்டித் தேர்வில் பங்கேற்க வைப்பது அவசியமாகிறது. நாட்டின் பல மாநிலங்களிலும் பல துறைகளிலும் இந்த வயது தளர்வு நடந்துள்ளது. ரயில்வே வாரியம் அறிவித்துள்ள பணியிட தேர்வில் குரூப் பி பதவிகளுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளித்துள்ளது.

எனவே, புதுவை ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் வயது தளர்வு அளித்து, தேர்வுகளில் வயது வரம்பின் விளிம்பில் உள்ள பட்டதாரிகளும் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்" என்று மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE