கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த முடிவை திரும்பப் பெறக்கோரியும் 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்தும் கையில் பதாகைகளை ஏந்தி எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது தொடர்பான அறிவிப்பு வந்ததிலிருந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஆகஸ்ட் 15-ம் சுதந்திர சுதந்திர தினத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அது தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், பதாகைகளை கையில் ஏந்தியும் செவல்பட்டி அருகே அழகாபுரியில் உள்ள விருதுநகர் திமுக எம்எல்ஏ-வான சீனிவாசன் வீட்டை இன்று செவல்பட்டியில் இருந்து ஊர்வலமாகச் சென்று முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE