திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சைவ சமயத்தின் தலைமைப் பீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் இன்று (அக்.07) சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்தின் போது மூலவர் ஸ்ரீவன்மீகநாதர், பிரதான மூர்த்தியான ஸ்ரீதியாகராஜ சுவாமி மற்றும் விடங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீமரகதலிங்க அபிஷேகத்தை கண்டு தரிசித்தார். பின்னர் ஸ்ரீரௌத்திர துர்க்கையம்மன் சன்னிதி, ஸ்ரீகமலாம்பாள், ஸ்ரீநீலோத்பலாம்பாள் சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்தார். அமைச்சர் நிர்மலா சீதராமன் சாமி தரிசனம் செய்தபோது சிவாச்சாரியார்கள் அந்தந்த சுவாமி சன்னிதிகளின் சிறப்பை அவருக்கு எடுத்துச் சொல்லி தீபாராதனை காண்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைக்கு வடிவம் கொடுத்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் திருவாரூர் மேலவடம்போக்கித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் அவதரித்த இல்லத்துக்கும் சென்று வழிபட்டார். அப்போது அந்தப் பகுதியில் பணியில் இருந்த சித்ரா என்ற தூய்மைப்பணியாளரிடம் நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன், பணியை சிறப்பாக செய்துவருவதருக்கும் அவருக்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களை மிஸ்டு கால் கொடுக்க சொல்லி பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE