அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பில் உள்ள கைத்தறி துணிகளை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: இபிஎஸ்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உற்பத்தி செய்து இருப்பில் உள்ள கைத்தறி துணிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 1200-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இச்சங்கங்களை நம்பி உள்ளன.

கடந்த ஓராண்டு காலமாக நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையை, இதுவரை ஸ்டாலினின் திமுக அரசு வழங்கவில்லை. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஸ்டாலினின் திமுக அரசில் 2022, 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகள் நெய்வதற்கான பணிகள் முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கப்படாமல் வேறு மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இதனால், பல நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்பட்டன.

எனது தலைமையிலான அரசில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கின. ஆனால், 40 மாத கால ஸ்டாலினின் திமுக ஆட்சி ஒருசில சங்கங்கள் தவிர, அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பல கைத்தறி சங்கங்களின் நிலைமை அடி பாதாளத்துக்கு சென்று இயங்க முடியாத நிலையில் உள்ளன.

எனவே, ஜெயலலிதா அரசு செய்ததுபோல், உடனடியாக அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், உற்பத்தி செய்து இருப்பில் உள்ள அனைத்து கைத்தறி துணிகளையும் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் மானியத்தை உடனடியாக வழங்குவதுடன், கொள்முதல் செய்த துணிகளுக்கு உண்டான பணத்தையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதன்மூலம் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE