100-வது ஆண்டு தொடக்க கொண்டாட்டம்: தமிழகத்தில் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி

By KU BUREAU

சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி தமிழகம் முழுவதும் 57 இடங்களில் நேற்று பேரணி நடைபெற்றது.

நடப்பாண்டில் ஆர்எஸ்எஸ் தொடக்க நாள் பேரணி நடத்த தமிழக அரசும், காவல் துறையும் அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்று 57 இடங்களில் பேரணி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் 7 இடங்களில் பேரணி நடைபெற்றது. எழும்பூர் லேங்ஸ் தோட்டச் சாலையில் தொடங்கிய பேரணி, ராஜரத்தினம் மைதானத்தில் முடிவடைந்தது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தற்கால சூழலில் இந்துத்துவா தெளிவுரை, தேசப் பிரிவினை நாட்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வீரவரலாறு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து ஆர்எஸ்எஸ் வட தமிழக துணைச் செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் பேசும்போது, "மாற்றுக் கருத்துடையவர்கள்கூட ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளனர். இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கிலேயே ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டதாக அப்போதே ஹெக்டேவார் தெளிவுபடுத்தியுள்ளார். சாதி குறித்து பேச வேண்டாம் என்ற அணுகுமுறை காரணமாகவே, தென் தமிழகத்தில் சாதிய மோதல் குறைந்துள்ளது" என்றார்.

முன்னதாக, ஆர்எஸ்எஸ் வடதமிழக தலைவர் மா.குமாரசாமி வெளியிட்ட அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் நூற்றாண்டின் தொடக்கத்தையொட்டி, குடும்ப மேன்மை, சமுதாய நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிமக்கள் கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE