வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவமா? பொய்யான விவரங்களை வெளியிடும் தமிழக அரசு - ராமதாஸ் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்துக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் மற்றொருவருக்கு அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது.

ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50 சதவீதத்துக்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றுள்ளது. இந்த சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்துக்கும் கிடைத்த பிரதிநிதித்துவத்தின் விவரங்களை தமிழக அரசு வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை. அரசால் குறிப்பிட்ட விவரங்களை ஒரு வாரத்தில் திரட்டிவிட முடியும்.

ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி சூறையாடல்கள் நடப்பதால்தான், அவை குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது. சில சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு அதிகமாகவும், வன்னியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட மிகவும் குறைவாகவும் பிரதிநிதித்துவம் இருப்பதால்தான், இந்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது. அனைத்து சமூகங்களுக்குமான 35 ஆண்டுகால புள்ளி விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக, தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டு, வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு கருதினால், அதை பாமக அம்பலப்படுத்தும். மக்கள் மன்றத்தில் திமுகவின் சமூக அநீதிகளை வெளிப்படுத்தி, சரியான பாடம் புகட்டுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE