சிதம்பரத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

By க. ரமேஷ்

கடலூர்: சிதம்பரத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் அகல்யா பாய் ஹோல்கரின் 300-வது ஆண்டு, அருட்பிரகாச வள்ளலாரின் 200 ஆண்டு நிறைவு மற்றும் சுவாமி சகஜானந்தரின் 133 ஆண்டு நிறைவு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்திலிருந்து அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை கோவை மாதேஷ் மகா சமஸ்தானம் ஶ்ரீ யுத்தேஸ்வர் சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் க.தண்டபாணி முன்னிலை வகித்தார்.

அணிவகுப்பு ஊர்வலம் எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகர் தெரு, வெல்லப்பிறந்தான் முதலியார் தெரு, தெற்கு ரத வீதி, படித்துறை இறக்கம் வழியாக போல் நாராயணன் தெருவில் முடிவுற்றது. பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத் தலைவர் ந.செல்வராஜ் வரவேற்றார். கோவை மாதேஷ் மகா சமஸ்தானம் ஶ்ரீ யுத்தேஸ்வர் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

அவர் பேசுகையில் வாழ்க்கையில் சேவை என்பது முக்கியமானதாகும். நம்மிடையே அன்பு இருந்தால் மட்டுமே எந்த எதிர்பார்ப்பின்றி சேவை செய்ய முடியும். அந்த வகையில் ஸ்வயம் சேவகர்கள், அன்பாக சேவை செய்பவர்கள். வாழ்க்கையில் ஏழு தகவல்களை கடைபிடிக்க வேண்டும், முதலாவது வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ, அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது பயம் என்ற விஷயத்தை தள்ளி வைத்துவிட்டு தையரியத்தோடு செயல்பட வேண்டும். மூன்றாவது கவலைகளை இல்லாமல், நான்காவது மகிழ்ச்சியோடு நாம் வாழ்வது எப்படி என பழகி கொள்ள வேண்டும். ஐந்தாவது எதையும் எதிர்பார்க்காம அன்பை கொடுக்க வேண்டும். ஆறாவது ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியான திறமை இருக்கும். அந்த திறமையை நூறு சதவீதம் வெளிக்கொண்டு வர வேண்டும். ஏழாவது எளிமையாக இருக்கவும், நன்றியோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ்நாடு சமுதாய நல்லிணக்க பேரவை மாநில பொறுப்பாளர் ஐயப்பன் பேசுகையில் அகல்பாய், 5 ஆயிரம் கோயில்களுக்கு மேல் திருப்பணி செய்துள்ளார். காசி, தமிழ்நாட்டில் கும்பகோணம், ராமேஸ்வரம் உஜ்ஜயினி உள்ளிட்ட கோயில்களை திருப்பணி செய்துள்ளார். பறவைகள், பட்சிகளை காத்திருக்கிறார். அவரது 300-வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். வள்ளலார் 200-வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறோம். சுவாமி சகஜானந்தா ஆரணி அருகே மேலபந்தலில் பிறந்து ஆன்மீகத்தில் பால் ஈடுபட்டு சிதம்பரத்தில் வந்து தங்கி கல்வி நிறுவனங்கைள தொடங்கியவர் அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, அங்கு ஆர்எஸ்எஸ் சேவகர்கள் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு சேவை புரிந்தனர். தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்ட போது உடனடியாக அப்பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சென்னையில் வெள்ளத்தின் போது சிக்கிய குழந்தைகளுக்கு பால், பிரட் சென்று வழங்கினார்கள். புகழுக்காக இந்த பணியை செய்யவில்லை. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சேவகம் செய்வதுதான் ஸ்வயம் சேவர்களின் பணியாகும் என்றார்.

முன்னதாக தற்காலிக சூழலில் இந்துத்துவா என்ற நூலை யுத்தேஸ்வர் சுவாமிகள் வெளியிட அதன் முதல் பிரதியை தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன் பெற்றுக்கொண்டார். ஆர்எஸ்எஸ் நகர செயலாளர் சிவகுரு நன்றி கூறினார். கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் ஶ்ரீதர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.ஶ்ரீதரன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், ஆடிட்டர்கள் விஸ்வநாதன், பாலசுப்பிரமணியன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE