திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி நவ.12-ல் பேரணி: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

By அ.சாதிக் பாட்சா

திருச்சி: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம், கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் தங்க. ஆதிலிங்கம் நோக்கவுரை நிகழ்த்தினார்.

கூட்டமைப்பு பொருளாளர் பெ. சவுந்தர்ராஜன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். அமைப்புச் செயலாளர் ப. காசிநாதன் அமைப்பு விதிகள் குறித்து விளக்கினார். இக்கூட்டத்தில், மத்திய அரசு திருக்குறளைத் தேசிய நூலாகவும், தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அறிவித்திடக் கோரியும் வரும் நவ.12 அன்று அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், கோரிக்கைப் பேரணி நடத்துவது, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்குத் மத்திய அரசால் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுதா சேஷய்யனை திரும்பப் பெற்று தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.

இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “அனுர குமார திசாநாயக்க”வுக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன், இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 142 தமிழக மீனவர்களை இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். மீனவர் பிரச்சனைக்கு இந்திய, இலங்கை அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும். சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் திருக்குறள் பேராசான்களை திறனூக்கப் பயிற்சிக்குப் பள்ளிக்கல்வித்துறை அனுமதித்து உத்தரவிட வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறையைச் செம்மைப்படுத்திட தமிழக அரசு போதிய அலுவலர்களை நியமனம் செய்யவேண்டும். மனித வளத்தை மேம்படுத்தவும், இளைஞர்களை சீரழிவிலிருந்து காப்பாற்றவும் மத்திய அரசு இந்தியா முழுவதும் போதைப்பொருளை ஒழிக்கவும் மதுக் கடைகளை மூடவும் கடுமையான சட்டம் இயற்றி உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், மகளிர் அமைப்புத் தலைவர் பிச்சி ஆதிலிங்கம், துணைத் தலைவர்கள் அ.பெருமாள், கருத்தப்பாண்டி, சீனி. பழமலை, துணைப் பொதுச்செயலாளர்கள் கோ. வெங்கடேசன், த. பழனிவேல், ம. இளையராஜன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE