ராமநாதபுரம்: சவுதி அரேபியா சிறையில் இருக்கும் மீனவரை மீட்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம் முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சமயகாந்த்(34). இவரது மனைவி நந்தினி தனது 3 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இன்று (மே 27) ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு சவுதி அரேபியா நாட்டில் மீன்பிடி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றிய தனது கணவரை போதைப்பொருள் கடத்தில் வழக்கில் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் என மனு அளித்தார்.
இதுகுறித்து நந்தினி செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது கணவர் சவுதி அரேபியாவின் தம்மாம் ஜூபைல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டுச் சென்றார். இந்நிலையில் கடந்த 09.11.2023 முதல் எனது கணவரிடம் தொலைபேசி தொடர்பு முதல் எந்த தொடர்பும் இல்லை. இது குறித்து எனது கணவருடன் வேலை பார்க்கும் தெரிந்த நபர்களிடம் போனில் விசாரித்த போது அவர் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அங்குள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் மூலமாக விசாரித்தபோது போதை பொருள் கடத்தல் வழக்கில் அவர் சிறையில் இருப்பது தெரியவந்தது. மேலும் சிறையில் இருக்கும் எனது கணவர் என்னிடம் போனில் பேசும்போது, தான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
எனவே சிறையில் இருக்கும் எனது கணவரை மீட்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு 10, 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும், 4 வயது மகனும் உள்ளனர். எனது கணவர் சிறையில் இருப்பதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது” என தெரிவித்தார்.