1,100 நாள் வேலை செய்த தற்காலிக கோயில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

By துரை விஜயராஜ்

சென்னை: கோயில்களில் 1,100 நாள் பணி செய்த கோயில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் சென்னை கோட்ட செயற்குழு கூட்டம் மற்றும் அம்பத்தூர் - ஆவடி புதிய கிளை தொடக்க விழா பாடி திருவல்லீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை அர்ச்சகர் ஞானசம்பந்தன், சென்னை கோட்ட தலைவர் தனசேகர், செயலாளர் இரா.ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில தலைவர் ஜெ.குமார், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் வாசுகி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சென்னை மாவட்ட தலைவர் விஜயகுமார், திருவல்லீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் குமரன், சென்னை கோட்ட நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கோயில் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அரசு பணியாளர்கள் போன்று கோயிலில் உழைக்கும் தற்காலிக தொகுப்பு பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும். பெண் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரம் வேண்டும். கோயிலில் 1,100 நாள் அல்லது மூன்றாண்டுகள் பணிப்புரிந்து வரும் தற்காலிக தொகுப்பூதிய, அன்னதான பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கோயில் அலுவலர் நிலை நான்கு பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் தேர்வில் 25 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை விரைவில் பிறப்பிக்க வேண்டும். கோயில் பணியாளர்களுக்கு கோயில் அருகிலேயே குடியிருப்பு கட்டி தர வேண்டும். மேலும், பணியாளர்களுக்கு கல்விக்கான முன் பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE