சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி மதிப்பீட்டு செலவில் 65% மத்திய அரசு வழங்கும்

By KU BUREAU

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணியின் மதிப்பீட்டுச் செலவில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு உதவி செய்துள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு இதுவரை திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவுக்கு நிதியுதவி தமிழக அரசின் பொறுப்பு என்ற நிலையில் ‘மாநிலத் துறை' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன்படி, நிலத்தின் விலை மற்றும்சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது. இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனானரூ.7,425 கோடியும் அடங்கும். மீதமுள்ள 35 சதவீத செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.

பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடம் இருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்கு முன், திட்டத்துக்கான கடன் நிதி கிடைக்கச் செய்வதும் ஏற்பாடு செய்வதும் மாநில அரசின் பணியாக இருந்தது.

மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும்.

இந்தக் கடன்கள் மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாகக் கருதப்படும். சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து கடன் தொகை மத்திய அரசுக்கும் மத்திய அரசின்பட்ஜெட்டிலிருந்து ‘பாஸ் த்ரூ’ உதவி என்ற முறையில் நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் செல்லும் வழிமுறையாக மாற்றியமைக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருக்கும் இடத்தில், அந்நிறுவனத்தின் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படும். கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், தவணை தொகையை திருப்பி செலுத்துவதற்கான 5 ஆண்டு சலுகை காலத்துக்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்த பின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இல்லாதபட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்துக்கு நிதி வழங்குவது மாநில அரசின் கடமையாகும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE