ஊதிய ஒப்பந்தத்துக்கான அடுத்தகட்ட பேச்சு எப்போது? - போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்ப்பு

By KU BUREAU

சென்னை: போக்குவரத்துக் கழகத்தில் ஊதிய ஒப்பந்தத்துக்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் ஆக.27-ம் தேதி நடைபெற்றது. இதில், 85 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுக கூட்டமாகவே நடைபெற்றது. ஆனால், முதல்கட்ட பேச்சு முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாதது தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, "அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பேச வேண்டியவை தொடர்பாக அரசுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி வருகிறது. இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பில் தாமதத்தை ஏற்படுத்தக் கூடாது. போராட்டங்கள், வேலைநிறுத்தம் என்ற கட்டாயத்துக்கு தள்ளாமல் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE