மார்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு பணி - போக்குவரத்து 4வது நாளாக பாதிப்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: மார்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதியில் 4வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மார்த்தாண்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. ரூ. 225 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் பம்மம் பகுதியில் ஏற்கெனவே கடந்த மே மாதத்தில் மேம்பாலம் நடுப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் அதே பகுதியில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு, உட்பகுதியில் உள்ள கம்பிகள் மேலே தெரிந்தது.

பள்ளம் ஏற்பட்ட பகுதியை தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சேதப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. முதலில் மேம்பாலத்தில் பழுதடைந்த பகுதியில் உள்ள சிமெண்ட் கலவை தார் போன்றவற்றை அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக கான்கிரீட் போடப்படும் பணி உடனடியாக தொடங்கப்படவுள்ளது.

பழுதடைந்த பகுதியில் கார் மற்றும் ஆட்டோ இருசக்கர வாகனங்கள் போன்றவை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. சீரமைப்பு பணி தொடங்கியதை தொடர்ந்து குழுத்துறையில் இருந்து மேம்பாலம் வழியாக வாகனங்கள் மார்த்தாண்டம் காந்தி மைதானம் வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அணுகுசாலை வழியாக சென்று வருகிறது.

இதனால் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. குமரி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. 4வது நாளாக இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மார்த்தாண்டம் சந்திப்பு அணுகு சாலையில் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்பட்டது.

இதனால் இந்த பகுதியில் வரும் வாகனங்கள் நின்று பொறுமையாக செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீசார் முன்னிலையில் டெம்போவில் ஜல்லி மண் கொண்டு வந்து இந்த பள்ளங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்டமாக பழுதான பள்ளத்தை காங்கிரீட் போட்டு சீரமைக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE