“சிங்கம் சோர்வடைந்து விட்டது” - ராஜேந்திர பாலாஜியை குத்திக் காட்டிய ஆர்.பி.உதயகுமார்!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: “விருதுநகர் மாவட்டத்தில் சிங்கம் சோர்வடைந்ததால் எதிரிகளுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது” என்று நகைச்சுவையாகக் கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குத்திக்காட்டினார்.

விருதுநகரில் அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும் சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், சிறுபான்மை நலப் பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “வட்டச் செயலாளர்கள் தங்களுக்கு உரிய பணிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும். மக்கள் பிரச்சினைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பலமுனை தாக்குதல்களை சமாளித்தோம். வெற்றியை நெருங்கினோம். வெற்றி பெறவில்லை என்றாலும் அதிக வாக்குகள் பெற்று இலக்கை அடைந்தோம். மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்துப் போராடினால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள். இனி நம்மை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை. அதிமுக கலப்படம் இல்லாத அருவி நீர்” என்றார்.

அவரைத் தொடர்ந்து, ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றது நாம் தான் என்பது உங்களுக்குத் தெரியும். விருதுநகர் சிங்கம் (ராஜேந்திர பாலாஜி) சோர்வடைந்ததால் எதிரிகளுக்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது. எதிரிகள் புகுந்துவிடக் கூடாது என்றால் சிங்கம் சோர்வடையாமல் இருக்க வேண்டும். சிங்கம் சோர்ந்தடைந்துவிட்டால் சிங்கத்தை நம்பியிருக்கும் எங்களை வேட்டையாடிவிடுவார்கள் என்று கூற வேண்டும்.

நமது கட்டமைப்பை சீர்படுத்தி, வலிமைப்படுத்தி, செம்மைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது. 75 ஆண்டுகள் கண்ட திமுக, ஆட்சியில் இருந்தது 25 ஆண்டுகள்தான். ஆனால், 52 ஆண்டுகள் கண்ட அதிமுக ஆட்சியில் இருந்தது 32 ஆண்டுகள். அதிமுக மீண்டும் ஆள வேண்டும்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து, அதிமுகவினருக்கு அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் வெங்கடேஷ் செய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE