“புதிய கல்விக் கொள்கையை திணிக்கப் பார்க்கிறார்கள்” - தயாநிதி மாறன் எம்.பி. ஆவேசம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: “புதிய கல்விக் கொள்கையை திணிக்கப்பார்க்கிறார்கள்” என தயாநிதி மாறன் எம்.பி. குற்றம் சாட்டினார்.

விருதுநகரில் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தென்மண்டல கலந்துரையாடல் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக அமைப்பாளர் ராஜகுரு தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மண்டல பொறுப்பாளர்கள் நம்பி, மனோகரன் ஆகியோர் வரவேற்றனர். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக நடத்தப்பட்ட விளையாட்டுகளின் புகைப்பட கண்காட்சியை தயாநிதி மாறன் பார்வையிட்டு, பெரியார், அண்ணா, கருணாநிதி உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதாகவும், இந்த அணி நடத்தும் விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பன்முகத்தன்மை கொண்ட நபர்களை அடையாளம் காண முடிவதாகவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், “எதிர்காலத்தில் திமுகவை தாங்கிப்பிடிக்கும் பொறுப்பு இளைஞர்களுக்குத் தான் உண்டு. எனவே இளைஞர்களின் பங்களிப்பு திமுகவிற்கு அவசியமாகிறது” என்று கூறினார்.

தயாநிதி மாறன் எம்.பி. பேசுகையில், “எனது அரசியல் பயணம் விருதுநகரில் தான் தொடங்கியது. 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி இங்கு மாபெரும் திமுக மாநாடு நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக அணி 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்தியாவில் மனித வளம் அதிகமாக உள்ளது. இந்த மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுக அரசு. பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதுடன், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியை அதிகம் தமிழகத்திற்கு கொண்டு வந்ததும் திமுக அரசு தான். ஆனால், இப்போது புதிய கல்விக் கொள்கையை திணிக்கப் பார்க்கிறார்கள். 5-ம் வகுப்பில் தேர்வு நடத்தி தேர்ச்சி பெறவில்லையெனில் கல்வி வராது என ஓரம் கட்டி விடுவார்கள்.

பள்ளிகளில் இடைநிற்றலே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் காலை உணவு மற்றும் கல்வி உதவித் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தை நோக்கி அதிகம் தொழிற்சாலைகள் வருவதற்கு காரணம் படித்த இளைஞர்கள் அதிகம் இருப்பதால் தான். கடந்த 20 மாதங்களில் 188 விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளோம். திமுகவை வலுப்படுத்த சமூக ஊடகங்களை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில், தென்காசி எம்பி-யான ராணி, எம்எல்ஏ-க்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), சிவகாசி மேயர் சங்கீதா மற்றும் தென் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE