சென்னை: விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி 3-வது நாளாக நேற்று நடைபெற்றது.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை (6-ம்தேதி) பிரம்மாண்ட விமான சாகசநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெரினாவில் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 1, 2-ம் தேதிகளில் நடந்த நிலையில், 3-வது நாளாக நேற்றும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரைஒத்திகை நடைபெற்றது.
விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக் கரணங்கள் அடித்தன. சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் ஒன்றுடன் ஒன்று மோதுவதுபோல மிக நெருக்கமாக வந்துசாகசம் செய்தன. சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகு ரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டுவங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழமையான விமானங்களும், அதிநவீன ரஃபேல் போர் விமானம் உள்ளிட்டவையும் இதில் பங்கேற்றன.
» தமிழிசையுடனான வார்த்தை போர்: காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் - திருமாவளவன் விளக்கம்
» நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி தப்பினர்
கமாண்டோ வீரர்கள் எம்ஐ-70 ஹெலிகாப்டரில் இருந்து குதித்து,தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணை கைதிகளை மீட்பது போல தத்ரூபமாக செய்து காட்டினர். சேட்டக் ஹெலிகாப்டர்களில் சென்ற வீரர்கள் தேசியக் கொடியை ஏந்தியடி 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தனர். நாளை நடக்க உள்ள சாகசநிகழ்ச்சிக்கான முழு ஒத்திகையாக இருந்ததால், மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்திய விமானப் படை பயிற்சி அதிகாரி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது: தற்போது நடந்துள்ள 3-வது நாள் முழு ஒத்திகையில் 72 விமானங்கள் பங்கேற்றன. விமானப் படை தினத்தில் டெல்லியில் மட்டுமே விமான சாகச நிகழ்ச்சி நடந்து வந்தது. மற்ற மாநில மக்களும் காண வேண்டும் என்ற நோக்கில் 2022-ல் சண்டீகரிலும், 2023-ல் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரிலும் நடத்தப்பட்டன. 3-வது ஆண்டாக தென் மாநிலத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
மெரினா கடற்கரை மிகப் பெரிய பரப்பளவை கொண்டுள்ளதால் சாகச நிகழ்ச்சியை நடத்துவது எங்களுக்கு வசதியாக உள்ளது. சூரியகிரண் அணியில் உள்ள வீரர்கள் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலம் இளைஞர்களுக்கு விமானப் படையில் சேருவதற்கான ஆர்வம் ஏற்படும்.இதைக் காண ஏராளமானோர் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும்.
உணவு எடுத்து வர வேண்டாம்: பொதுமக்கள் யாரும் உணவுப்பொருட்களை எடுத்து வர வேண்டாம். உணவுப் பொருட்களை கொண்டு வந்தால் அவற்றைஉண்ண பறவைகள் வரும். இது, விமானிகளுக்கு இடையூறாக, அச்சுறுத்தலாக அமையும். அதேபோல, பட்டாசு போன்றவற்றையும் எடுத்துவர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்று ஒத்திகையை காண பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் மெரினாவில் திரண்டனர். இதனால், கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறுசாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.