தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 20,000 கடைகளுக்கு `சீல்' - தமிழக அரசு @ ஐகோர்ட்

By KU BUREAU

மதுரை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கூல் லிப், குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 20 ஆயிரம் கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் குட்கா, புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருள் விற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீன், முன்ஜாமீன் கோரி மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை நீதிபதி பரத சக்கரவர்த்தி ஏற்கெனவே விசாரித்தபோது, “தமிழகத்தில் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வெளிமாநிலங்களில் இருந்து.. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர் வாதிடும்போது, “தமிழகத்தில் கூல் லிப், குட்கா, புகையிலைப் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. எனினும், வெளிமாநிலங்களில் இருந்து இவை சட்டவிரோதமாக தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதைபோலீஸார் தடுத்து வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த தற்காக தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கடைகளுக்கு மேல் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தவிவகாரத்தில் மத்திய அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக பக்கத்து மாநிலங்களுக்கு தமிழக சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது” என்றனர்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “கூல் லிப்,குட்கா, புகையிலைப் பொருட்கள் வேறு மாநிலங்களில் அனுமதி பெறப்பட்டு உற்பத்திசெய்யப்படுகின்றன. தமிழகத்தில் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், கூல் லிப்,குட்கா, புகையிலை உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது” என்றார்.

பின்னர் நீதிபதிகள், “தற்போது போதைப் பொருட்களை இளைஞர்களைத் தாண்டி, பள்ளி மாணவர்களும் அதிகஅளவில் பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு விற்பனை நடை பெறுகிறது. போதைப் பொருட் களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடும் நடவடிக்கைகளை எடுத் தால் மட்டுமே புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க முடியும். கூல் லிப்,குட்கா, புகையிலைப் பொருட் களை தடை செய்வது குறித்துமத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். வழக்கு தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE