விஜய் மீது ‘பாயும்’ பாஜக முதல் ஈரான் தலைவர் சூளுரை வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

அதிகாலையில் திரண்ட விஜய் கட்சித் தொண்டர்கள்! - விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை பந்தல் கால் நடப்பட்டது. புதுச்சேரி விக்னேஷ் குருக்கள் தலைமையில் சபரீஷ் குருக்கள், சுந்தரேஸ்வர குருக்கள் மந்திரங்கள் சொல்ல மும்மதங்கள் சார்ந்த படங்களை வைத்து மும்மதம் சார்ந்த புனித நீர் தெளித்து பூஜை நடந்தது. கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் காலை சரியாக காலை 4.50 மணிக்கு மாநாட்டிற்காக சென்னை மாநாட்டு பந்தல் அமைப்பாளர் ஆனந்தன் பந்தல் காலை நட்டார். சுமார் 5 ஆயிரம் பேர் அதிகாலை இருட்டு வேளையிலும் சிரமங்களைப் பொருட்படுத்தாது பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

‘பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல...’ - நடிகர் விஜய்: தவெக மாநாடு தொடர்பாக விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம், அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

விஜய் அணுகுமுறை மீது தமிழக பாஜக விமர்சனம்: விஜய் கட்சி மாநாட்டுக்கு பூர்வாங்கப் பணிகள் இந்து முறைப்படி நடத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, “தனிப்பட்ட விருப்பத்துக்காக ஆண்டவனை வழிபடுவது வேறு, இந்து உணர்வை மதிப்பது என்பது வேறு. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லாமல் இந்து உணர்வை காயப்பட்த்திவிட்டு இன்று நடத்தப்பட்ட பூஜையால் எதுவும் மாறிப் போகாது” என்றார்.

இதனிடையே, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “நடிகர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'மற்ற கட்சிகளை போல நம் கட்சி சாதாரண கட்சி அல்ல' என குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கும் கட்சி, பல மாநிலங்களை ஆளும் கட்சிகள், பல ஆண்டுகளாக பல கொள்கைகளை கொண்ட கட்சிகள் நாட்டில் இருக்கிறது. அவரது இந்த வார்த்தை தமிழக அரசியலில் ஏற்றுக்கொள்ளப்படாது.

விஜய் அவரது கட்சியை உயர்வாக சொல்லலாம். ஆனால், மற்ற கட்சிகளை சாதாரண கட்சிகள் எனச் சொல்லுவதற்கு விஜய் எந்த அளவுக்கு உயர்ந்து விட்டார் என்பது எனக்கு தெரியவில்லை. விஜய் மற்ற அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும். பெரியாரையும் வணங்குவோம். அதே நேரத்தில் மறைமுகமாக கடவுளையும் வணங்குவோம் என விஜய் திமுக பாணியை பின்பற்றுகிறார். விஜய் இரட்டை வேடம் போடுகிறார். அதை அவர் கைவிட வேண்டும். திராவிட மாடல் போல, ஒரு குட்டி திராவிட மாடலை விஜய் உருவாக்குகிறார்.

சினிமாவுக்கு வருவது போல, விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கூடி விடும். அதில் சந்தேகம் இல்லை. மாநாட்டை விஜய் நடத்திக் காண்பித்துவிடுவார். ஆனால், கட்சியை எப்படி நடத்திக் காண்பிப்பார் என்பதைத் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திரைத்துறையினர் அடித்தட்டு மக்களை தான் குறி வைக்கிறார்கள். அவர்களை வேலைக்குச் செல்ல வேண்டாம், மாநாட்டிற்கு வாருங்கள் என சொல்வது நியாயம் அல்ல” என்று அவர் கூறினார்.

திருப்பதி லட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு: திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சிறப்பு விசாரணைக் குழு, 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய பிரதிநிதி ஆகியோரைக் கொண்டதாக இருக்கும் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் நம்பிக்கை: புதுடெல்லியில் நடந்த கவுடிலியா பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை: இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50 பேரை விடுதலை செய்துள்ள இலங்கை நீதிமன்றங்கள், 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 50 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

‘காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்’ - திருமாவளவன்: தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வீடு திரும்பிய ரஜினிகாந்த் நெகிழ்ச்சி: உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். அவர் தனது எக்ஸ் தளத்தில், நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தலைவர் காமெனி சூளுரை: “ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது. சில இரவுகளுக்கு முன்பு நமது ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை என்பது முற்றிலும் சட்டபூர்வமானது. அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ல் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் தர்க்கரீதியிலானதும், சட்டபூர்வமானதும் ஆகும்” என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே, லெபனான் தலைநகரான பெய்ரூட், காசா மற்றும் வெஸ்ட் பேங்கில் கொடூரத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடந்த தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், 151 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹரியானா தேர்தல்: ராகுல் வாக்குறுதி: ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும்; போதையில்லா மாநிலமாக மாற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE