தமிழக அரசியலின் கரும்புள்ளி திருமாவளவன் - ஹெச்.ராஜா விமர்சனம்!

By KU BUREAU

திருநெல்வேலி: “தமிழக அரசியலில் கரும்புள்ளியாக திருமாவளவன் இருக்கிறார்” என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா காட்டமாக கூறினார். மேலும், தவெக தலைவரான நடிகர் விஜய் அணுகுமுறையையும் அவர் சாடினார்.

இது குறித்து நெல்லையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ‘நோ பால்’ போட்டு ரன் எடுப்பது போல் அந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த மாநாட்டில் திமுக, விசிகவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மதுக் கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நீக்கியது. மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் எனச் சொல்வது போலி நாடகம். மது மூலமாக மாநில அரசுக்கு கிடைக்கும் ரூ.48 ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவேண்டும் என கோருவதற்கும் மத்திய அரசின் மீது பழிபோடவும் போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

தமிழகத்தில் சாராய மரணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 28 பேர் உயிரிழந்தார்கள். இந்த ஆண்டு 68 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களை திசை திருப்பி நடத்தப்பட்ட நாடகமாக விசிக மாநாடு பார்க்கப்படுகிறது. விசிக மாநாட்டில் பெண் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அநாகரிகமான காட்சிகள் விசிக மாநாட்டில் நடந்தது. தமிழக பாஜக முன்னாள் தலைவரும் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அநாகரிகத்தின் உச்சமாக திருமாவளவன் பேசியுள்ளார்.

தமிழக அரசியலில் கரும்புள்ளியாக திருமாவளவன் இருக்கிறார். திமுகவை அதன் குற்றங்களிலிருந்து காப்பாற்ற மாநாடு என்ற நாடகத்தை விசிக அரங்கேற்றி உள்ளது. திமுகவில் போதைப்பொருள் அணி என அணியை உருவாக்க வேண்டும். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக திமுக செயல்படுகிறது” என்றார்.

விஜய் மாநாட்டுக்கு பூர்வாங்கப் பணிகள் இந்து முறைப்படி நடத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, “தனிப்பட்ட விருப்பத்துக்காக ஆண்டவனை வழிபடுவது வேறு, இந்து உணர்வை மதிப்பது என்பது வேறு. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லாமல் இந்து உணர்வை காயப்படுத்திவிட்டு இன்று நடத்தப்பட்ட பூஜையால் எதுவும் மாறிப் போகாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE